செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே அமைந்துள்ள சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்துக்குள், செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆணைய குழுவின் சார்பில் ஊர்ப்புற நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது, நூலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கட்டிடம் முழுவதும் தண்ணீரில் ஊறி, சுவர்கள் முழுவதும் நீர் ஊற்றெடுத்து வருகிறது. மேலும், நூலக கட்டிடத்தினுள் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அரிய வகையான நூல்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நூலகத்தின் மேற்கூரையின் மீது பாசி படிந்து செடி, கொடிகள் வளர்ந்திருப்பதால் பராமரிப்பின்றி கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. மேலும், நூலகத்துக்கு வந்துள்ள புதிய புத்தகங்களை அடுக்கி வைக்கக்கூட இடமில்லாததால், மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், புத்தகங்கள் வாசிக்கப்படாமலேயே பாழாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், நூலகத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டித் தர வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.