சூளைமேனி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையமாக மாறிய சமுதாயக் கூடம்: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

3 hours ago 1


ஊத்துக்கோட்டை: சூளைமேனி ஊராட்சியில், சமூதாயக் கூடத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலைத்திற்கு புதிய கட்டிடம் கட்டி, சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஊத்துக்கோட்டை அருகே, எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் விஷேச விழாக்களுக்காக பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருந்தது. இந்த திருமண மண்டபங்களில் அதிகளவில் வாடகை பணம் வசூல் செய்யப்பட்டது. இதனால், தங்கள் கிராமத்துக்கென்று சமுதாயக் கூடம் கட்ட வேண்டும் என சூளைமேனி பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது வீட்டு விஷேசங்களை சமுதாயக்கூடங்களில் நடத்தி பெரும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த சமுதாயக் கூடத்தில் அரசின் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. சுற்று வட்டார பகுதிகளான பாலவாக்கம், லச்சிவாக்கம், கீழ்கரமனூர் கண்டிகை, தண்டலம், ஆத்துப்பாக்கம் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் சூளைமேனி பகுதியில் உள்ள இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து, தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்கிறார்கள்.

இதனால், சமுதாயக்கூடம் முற்றிலுமாக நெல் கொள்முதல் நிலையமாக மாறியது. பொதுமக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களை சமுதாயக் கூடத்தில் நடத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, சூளைமேனி பகுதியில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, சமுதாய நலக்கூடத்ைத முற்றிலுமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சூளைமேனி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையமாக மாறிய சமுதாயக் கூடம்: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article