
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளின்போது இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதில் சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் காட்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தநிலையில், நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு மகிழ்ச்சியாக தற்போது நிறைவடைந்துள்ளது, திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நிறைய மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. மேலும் நான் என் வாழ்நாளில் மறக்க முடியாத சகோதரனை உருவாக்கி இருக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.