
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 61 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ராஜஸ்தான் அணி, மும்பை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 100 ரன் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக பவுல்ட், கரண் சர்மா ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், சூர்யவன்ஷியை தூக்கி வச்சி கொண்டாட வேண்டாம் என இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இடம்பெற்ற போதே அவர் தன்னுடையை திறமையை வெளிக்காட்டி உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இளையோருக்கான டெஸ்ட் போட்டியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவே சதம் அடித்திருந்தார். அதுவும் 13 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருந்தர். அப்போதே அவருடைய திறமை என்னவென்று நம் அனைவருக்கும் புரிந்து இருக்கும்.
எனவே, அங்கிருந்து அவர் மேலே தான் செல்வார். ஆனால், அதே சமயம் வைபவை தேவையில்லாமல் ஒரே நாளில் தூக்கி ரொம்ப கொண்டாடக்கூடாது. மேலும், அவர் இளம் வயது என்பதால் தன்னுடைய விளையாட்டை மென்மேலும் வளர்த்துக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அதுவும் இல்லாமல் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் அமர்ந்து இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக் கொள்வார்.
இதன் மூலம் அவர் மென்மேலும் சிறந்த வீரராக மாற வாய்ப்பு இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் தாம் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சர் அடித்திருக்கிறார். தற்போது அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது.
இதன் மூலம் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இந்த வீரர் சிக்ஸர் அடிக்கத்தான் முயற்சி செய்வார். எனவே, நாம் அதற்கு தகுந்த மாதிரி பந்து வீசி அவருடைய விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால் வைபவ், தனது பேட்டிங் குறித்து கவலைப்பட தொடங்கி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.