'சூது கவ்வும் 2' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

4 weeks ago 8

சென்னை,

இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'சூது கவ்வும் 2'. இந்த படத்தில் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், 'சூது கவ்வும் 2' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

மிர்ச்சி சிவா, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்களை கடத்தி பணம் பறித்து பிழைப்பு நடத்துகிறார். அரசியல்வாதியான கருணாகரன் தேர்தலில் பண பலத்தால் ஆட்சியை பிடிக்க திட்டம்போட்டு பணத்தை ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கிறார். தன்னுடைய கற்பனை உலக காதலியின் மரணத்துக்கு கருணாகரன்தான் காரணம் என்று அவரை பழிவாங்க கடத்துகிறார் சிவா.

இதற்கிடையில் இன்னொரு பக்கம் இரண்டு காவல் துறை அதிகாரிகள் மூலம் சிவாவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிவா தன் காதலிக்காக கருணாகரனை பழி வாங்கினாரா? கருணாகரன் பண பலத்தால் ஆட்சியை பிடித்தாரா? காவல்துறை பிடியிலிருந்து சிவா தப்பித்தாரா? என்பதை சொல்கிறது மீதி கதை.

விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ள படத்தில் விஜய் சேதுபதி ஏற்ற அதே வேடத்தை சிவா தொடர்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத வேடம் என்பதால் அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார். நிறுத்தி நிதானமாக கடத்தலுக்கான விதிகளை பேசுவது, கடத்தியவர்களை கண்ணியமாக நடத்துவது, காவல்துறையிடம் பணிவாக நடந்து கொள்வது, பாம்புக்காக நடுங்குவது, இல்லாத காதலிக்காக உருகிப் போவது என தனது வேடத்தை ரசித்து செய்துள்ளார்.

கதாநாயகி ஹரிஷா தூக்கலான கவர்ச்சியால் தன் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார். படத்தின் இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவுக்கு கருணாகரனுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவரும் நன்றாக பயன்படுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

முதல் அமைச்சராக வரும் ராதாரவி, அரசியல் கட்சி தலைவராக வரும் வாகை சந்திரசேகர் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார்கள். அருள்தாஸ், யோக்ஜேப்பி, எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே கார்த்தி, கல்கி, கவி, அருள்தாஸ், ரகு என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.

நிழல் உலக கதைக்கு தேவையான ஒளிப்பதிவை நன்றாகவே வழங்கி உள்ளது கார்த்திக் தில்லை கேமரா. எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். நகைச்சுவை கதையை சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.அர்ஜுன். 

Read Entire Article