பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராம பகுதியிலும்,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த ஆண்டு ஜூன் மாத முதல் வாரத்திலிருந்து ஆகஸ்ட் வரையிலும் தொடர்ந்து சில மாதமாக தென் மேற்கு பருவமழை பெய்தது. அதன்பின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சில நாட்கள் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது.
அதிலும் கடந்த இருமாதமாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமானது. வெயிலின் உக்கிரத்தால் விவசாயிகள் வேதனையடைந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்று வட்டாரத்தில், கோடை மழையானது சாரல் மழையுடன் நின்றுபோனது.அதன்பின் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமானது. இந்நிலையில் பொள்ளாச்சி நகரை சுற்றியுள்ள பகுதியில், நேற்று முன்தினம் இரவில் கோடை மழை சாரலாக பெய்ய துவங்கியது. பின் நள்ளிரவில் கன மழை பெய்தது.
இந்த மழை சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேல் நீடித்துள்ளது.தொடர்ந்து சில மணிநேரம் பெய்த மழையால், பள்ளமான இடங்களில், மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் ஆறாக ஓடியது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் ஆனைமலை அருகே மழை பொய்த்துள்ளது. ஆனால், பொள்ளாச்சி நகரை சுற்றியுள்ள பகுதியில் இரவு நேரத்தில் சில மணி நேரம் தொடர்ந்து பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.