சுற்றுலா தலங்கள், கோயில்களில் தீவிர பாதுகாப்பு; குமரியில் ஆயுத பூஜை விழா ஏற்பாடு தீவிரம்

1 month ago 7

நாகர்கோவில்: குமரியில் ஆயுத பூஜையையொட்டி, அனுமதியின்றி இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என காவல்துறையினர் கூறி உள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 10 வது நாள் விஜயதசமி விழா ஆகும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா, கடந்த 3 ம் தேதி தொடங்கியது. விழாவின் 9 வது நாளான வருகிற 11ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 12ம்தேதி விஜயதசமி ஆகும். நவராத்திரி விழா குமரி மாவட்டத்திலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள், கோயில்களில் கொலு அமைத்து பூஜைகள் நடத்தி வருகிறார்கள். நாகர்கோவிலில் வடிவீஸ்வரம், கிருஷ்ணன்கோவில், கோட்டார், ஏழகரம், வடசேரி, ஒழுகினசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் பிரமாண்டமாக கொலு அமைத்துள்ளனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் முக்கிய கோயில்களிலும் கொலு அமைக்கப்பட்டு உள்ளது. வீடுகள், கோயில்களில் உள்ள கொலுவில் பல்வேறு விதமான கடவுள் உருவங்கள் கொண்ட பொம்மைகள் வைத்துள்ளனர்.

விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் பொம்மைகள் வைத்துள்ளனர். திருக்கல்யாணம், வளைகாப்பு, கிரஹபிரவேசம், பட்டாபிஷேகம், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட் போன்றவையும் கொலுவில் இடம் பெற்றுள்ளன. காஞ்சிபுரம் தாயார், திருநாகை, ஆராஅமுதன், திருவில்லிபுத்தூர், வானமாலை, நாச்சியார் திருக்கோலம், கிருஷ்ண லீலைகள், நவ திருப்பதி உள்ளிட்டவை மிகவும் அழகாகவும் கொலுவில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

நவராத்திரி விழாவின் 9 வது நாளான வரும் 11ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜையொட்டி ஆட்டோ நிறுத்தங்கள், வேன், கார் நிறுத்தங்களில் சிறப்பு பூஜைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயுத பூஜை விழா அன்று இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளில் தொழிலாளர்கள், வியாபாரிகள், ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆயுத பூஜை அன்று தொழிலகங்களிலும் பூஜைகள் நடக்கும்.

ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை நாட்களும் வருகின்றன. எனவே மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இன்னிசை நிகழ்ச்சிகள் காவல் துறை அனுமதியின்றி நடத்த கூடாது. மின் விளக்கு அலங்காரங்கள் செய்பவர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என காவல்துறையினர் கூறி உள்ளனர். சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி, திற்பரப்பு, பத்மநாபபுரம், மாத்தூர் தொட்டிப்பாலம், லெமூரியா பீச், சொத்தவிளை, சங்குதுறை உள்ளிட்ட பகுதிகளிலும், கோயில்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

The post சுற்றுலா தலங்கள், கோயில்களில் தீவிர பாதுகாப்பு; குமரியில் ஆயுத பூஜை விழா ஏற்பாடு தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article