*நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ்பெருமாள் துவக்கி வைத்தார்
விகேபுரம் : சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முண்டந்துறை வனச்சரகத்தில் நடந்த முகாமை துவக்கிவைத்த நகராட்சி சேர்மன் செல்வசுரேஷ் பெருமாள், பறவைகள், பட்டாம்பூச்சிகளின் செயல்பாடு குறித்த படங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
நெல்லை மாவட்டம் முண்டந்துறை வனச்சரகத்தில் வனத்துறை விருப்ப நிதியிலிருந்து தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம் நேற்று நடந்தது. இதில் உதவி வன பாதுகாவலர் குணசீலி தலைமை வகித்தார். முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நகராட்சி சேர்மன் செல்வசுரேஷ் பெருமாள், மாணவர்களுக்கு பறவைகள், பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் பற்றிய படங்களை மாணவர்களுக்கு வழங்கி முகாமை துவக்கிவைத்தார்.
இதில் உதவி செயற் பொறியாளர் திலக் சைமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுஜாதா, காரையாறு அரசு உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியை பிரபாவதி, தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கற்பகம், காணி இன மக்களின் நாட்டாண்மை வேலுச்சாமி, வனவர் அர்ஜுனன் மற்றும் காணிகுடியிருப்பு, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முகாமானது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மாணவர்களுக்கு வகுப்பறை கல்வியைக் கடந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள், மலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை அமைப்புகள் குறித்தும், இயற்கையோடு இணைந்து சிறந்த வெளிப்புறக் கல்வித்திட்டத்தினையும், மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் இம்முகாமில் காடுகள், மலைப்பகுதிகளைப் பற்றிய விழிப்புணர்வு, மலையேற்றப்பயிற்சி, நடைபயணம், வனவிலங்கு கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற செயல்பாடுகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள், வண்ணத்துப் பூச்சிகள் பற்றிய வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. வனக்காவலர் செல்லத்துரை நன்றி கூறினார்.
The post சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம் appeared first on Dinakaran.