
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 90 ரன்னும், சாய் சுதர்சன் 52 ரன்னும் எடுத்தனர்.
கில் - சுதர்சன் இணை முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து அசத்தியது. தொடர்ந்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 39 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் ரஹானே 50 ரன் எடுத்தார்.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் கில் - சுதர்சன் இணை 100+ பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்தது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
போட்டியின் தொடக்கத்தில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அதனால் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடுவது கடினமாக இருந்தது. அதன் பின் எங்களுக்கு வேகம் கிடைத்தது. நானும் சுபியும் (சுப்மன் கில்) நல்ல தொடர்பு கொண்டுள்ளோம். நாங்கள் எதிரணி வீசும் மோசமான பந்துகளை பயன்படுத்த முயற்சித்தோம். போட்டியை முடிந்தளவு கடைசி வரை எடுத்துச் செல்ல முயற்சிப்போம்.
சுபியுடன் கம்பெனி கொடுத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். அவருடைய அனுபவம் எனக்கும் உதவுகிறது. சூழ்நிலைகள் கடினமாக இருக்கும் போது நாங்கள் இரண்டு ரன்களை எடுக்க முயற்சிக்கிறோம். பிட்ச் கொஞ்சம் கடினமாக இருப்பதால் கையில் விக்கெட்டை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமாக இருந்தது. எங்களுடைய பவுலர்களுக்கு நாங்கள் நல்ல இலக்கை கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.