
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. டிராவிஸ் ஹெட் 8 ரன்களிலும், அபிஷேக் சர்மா 18 ரன்களிலும் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை. 17 ரன்களில் அவுட்டானார்.
இதன்பின் ஜோடி சேர்ந்து அணிக்கு வலுசேர்த்த நிதிஷ் ரெட்டி - கிளாசென் இணை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. கிளாசென் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே நிதிஷ் ரெட்டியும் 31 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடிக்கு பெயர் போன ஐதராபாத் அணி இந்த சீசனில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. அது இந்த போட்டியிலும் தொடர்ந்தது.
இறுதி கட்டத்தில் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் (9 பந்துகள்) அடித்தார். இதன் மூலம் ஐதராபாத் அணி ஓரளவு நல்ல நிலையை எட்டியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் அடித்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் டக் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் 16.4 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. சுப்மன் கில் அரைசதம் கடந்து 61 ரன்களுடனும், ஷெர்பேன் ரூதர்போர்டு 35 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.