
கலிபோர்னியா,
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் 25-ந்தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இவர்களுடைய 14 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, வீரர்கள் 4 பேரும் பூமிக்கு திரும்புகின்றனர். இதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்பட விண்வெளி வீரர்கள் 4 பேரும் நேற்று மதியம் 2 மணியளவில் சென்றனர். அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர். விண்கலத்துடனான கேபிள்களை இணைத்து, தங்களுடைய புறப்பாட்டிற்காக தயாரானார்கள்.
இதற்காக, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. இதன்பின்னர், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்கலத்திற்குள் நுழைந்தனர். இதற்கான பணிகள் நிறைவடைந்ததும் மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் பயணம் தயாரான நிலையில், டிராகன் விண்கலம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. 10 நிமிட காலதாமதத்திற்கு பின்னர் 4.45 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்தது.
விண்கலத்திற்கும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் (ஐ.எஸ்.எஸ்.) இடையேயான பகுதி பாதுகாப்பாக மூடப்பட வேண்டும். அப்போதுதான் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும். இதற்காக சிறிது கூடுதல் நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. இதன்படி, விண்கலம் மற்றும் ஐ.எஸ்.எஸ். இடையேயான பகுதி பாதுகாப்பாக மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்தது. 2 முறை தனித்தனியாக இந்த பிரிக்கும் பணியை டிராகன் விண்கலம் தன்னிச்சையாக மேற்கொண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து தனியாக வந்தது. இதனையடுத்து, 4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய டிராகன் விண்கலத்தின் பயணம் தொடங்கியது.
22.5 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடையும். டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது. இந்த சூழலில், சரியாக பிற்பகல் 3 மணியளவில் டிராகன் விண்கலம் 4 வீரர்களுடன் தரையிறக்கப்பட்டு உள்ளது.