சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளான 11.7.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
மாவீரன் அழகு முத்துக்கோன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியரின் மகனாக 11.7.1710 அன்று பிறந்தார். இவர் ஜெக வீரராம எட்டப்பநாயக்கரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். நெல்லைச் சீமையிலுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடமும் நேரடியாக வரிவசூலித்த ஆங்கிலேயர்கள், 1755 ஆம் ஆண்டு எட்டையபுரத்திற்கும் வரிகேட்டு ஓலை அனுப்பினர். இதனை எதிர்த்து, ஆங்கிலேயர்களுக்கு நாம் ஏன் வரி தர வேண்டும் என்று எட்டையபுரம் மன்னரிடம் மாவீரன் அழகுமுத்துக்கோன் கடுமையாக வாதிட்டதன் விளைவாக, மன்னரும் அழகு முத்துக்கோனின் உணர்வினை ஏற்றுக்கொண்டார்.
எட்டப்ப மன்னர் ஆங்கிலேயருக்கு வரிகட்ட மறுத்ததால், ஆங்கிலேயர்கள் 1756 ஆம் ஆண்டு கான்சாகிப் என்பவரை நெல்லைச் சீமைக்குக் கமாண்டராக நியமித்தனர். கமாண்டர் கான்சாகிப்பின் பீரங்கிப் படையானது எட்டயபுரத்தைத் தாக்கியதையடுத்து எட்டயபுரம் ஆங்கிலேயரின் வசமானது.
எட்டையபுரத்தை மீட்டெடுக்க மாவேலி ஓடை, பெத்தநாயக்கனூர் பகுதியிலிருந்த வீரர்களைத் தமது படையில் சேர்த்து, அவர்களுக்குப் போதிய போர்ப் பயிற்சி அளித்து, இரண்டு பெரிய படைகளை உருவாக்கினார். வெங்கடேஸ்வர எட்டப்பர். அழகு முத்துக்கோன் ஆகிய இருவரது தலைமையிலும் வீரர்கள் போரில் ஈடுபட்டனர்.
1759 ஆம் ஆண்டில் மாவீரன் அழகுமுத்துக்கோன் தலைமையேற்ற படை பெத்தநாயக்கனூர் கோட்டையில் இரவில் தங்கியது. இதை உளவு மூலம் அறிந்த நெல்லைச் சீமையின் கமாண்டர் கான்சாகிப் 200-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் இருந்த அழகுமுத்துக்கோன் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தி, சிறை பிடித்தனர். மன்னிப்புக் கேட்டால் உயிர்ப்பிச்சை தருவதாக ஆங்கிலேயர்கள் தெரிவித்தனர். “அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர்விடுவோம்” என்று வீரன் அழகுமுத்துக்கோன் கம்பீரமாக முழக்கமிட்டார். மாவீரன் அழகு முத்துக்கோனுடன் இருந்த ஏழு வீரர்களையும்
பீரங்கி வாயில் கட்டி வைத்துச் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொடூரச் சம்பவத்தின் மூலம் விடுதலைக்கான விதை தமிழகத்தில் முளைவிடத் தொடங்கியது. விடுதலைக்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் வரலாறு. வீரம், தியாகம் போன்றவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், அன்னாரின் பிறந்த நாளான ஜூலை 11 அன்று ஆண்டுதோறும் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (11.7.2025) காலை 10.00 மணியளவில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்: நாளை மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.