சுதந்திர போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்திய புகார்; பாஜக எம்பி கங்கனாவுக்கு நோட்டீஸ்: மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி

3 months ago 18

ஜபல்பூர்: சுதந்திர போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்திய புகாரின் அடிப்படையில் பாஜக எம்பி கங்கனாவுக்கு மத்திய பிரதேச கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள எம்பி – எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அமித் குமார் சாஹு என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தால், இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா, கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகுதான் (மோடி ஆட்சிக்கு வந்தபின்) இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று பேசியுள்ளார்.

மேலும் கடந்த 1947ம் ஆண்டில் பிச்சை எடுத்துதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றும், அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசும் ஆங்கிலேயர்களின் நீட்சிதான் என்றும் பேசியுள்ளார். இவரது பேச்சுகள், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது தேசதுரோக வழக்குபதிய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக அதர்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்றத்தை நாடியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஸ்வேஸ்வரி மிஸ்ரா, கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி
வைத்தார்.

The post சுதந்திர போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்திய புகார்; பாஜக எம்பி கங்கனாவுக்கு நோட்டீஸ்: மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article