சுக்கிரன் நன்மையைச் செய்வாரா? செய்யமாட்டாரா?

3 hours ago 1

எந்த ஒரு கிரகத்தின் பலாபலன்களை கணக்கில் எடுக்கும் போதும், பாவ காரகத்துவத்தையும், கிரககாரகத்துவத்தையும் இணைத்துத்தான் பலன் காண வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். ஒரு கிரகத்தின் தசாபுக்தி நடக்கின்றபொழுது, அந்தக் கிரகத்தின் காரகத்துவம், அந்த கிரகம் எந்த எந்த பாவங்களோடு தொடர்பு கொள்கிறதோ அந்த பாவ காரகத்துவத்தையும் இணைத்துத்தான் பலன் தரும். கிரகங்களைவிட பாவங்கள் வலிமை படைத்ததாக இருந்தால், அந்த பாவங்களுக்கான விஷயங்கள்தான் வாழ்வில் பெரும்பான்மையாக நடக்கும். இப்பொழுது சுக்கிரனைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் களத்திரகாரகன் என்கின்ற சிறப்பு காரகத்திற்குப் பொறுப்பாகின்றார். ஒருவருக்கு திருமணமாக வேண்டும் என்று சொன்னால், சுக்கிரன் வலிமையாக இருக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். சுக்கிரன் வலிமை குறைந்து இருந்தால், திருமணமாகாதா? என்று ஒரு கேள்வி இதில் தொக்கி நிற்கிறது அல்லவா. ஆனால், பெரும்பாலான ஜாதகங்களில் சுக்கிரன் பலமற்றுப் போய், ஏழாம் இடமும், இரண்டாம் இடமும் வலிமை பெற்று, திருமணம் ஆகிவிடுவதையும் பார்த்திருக்கின்றோம். ஆயினும், சுக்கிரன் பாதிப்படைந்து இருப்பதால், அவர்கள் வாழ்வு முழுமையான வாழ்வாக, திருப்தியான வாழ்வாக இருப்பதில் பிரச்னைகள் இருப்பதையும் நாம் காணலாம். குறிப்பாக, பாலியல் விஷயங்களில் பெரிய அளவில் நாட்டமோ திருப்தியோ இருக்காது.

அதனால் குடும்பத்தில் சில பிரச்னைகள் வரும். ஆனால், குடும்ப அதிபதியும் களத்திர ஸ்தான அதிபதியும் அந்தந்த ஸ்தானங்களும் வலுவோடு இருந்து, சுக்கிரனுடைய தசையும் வராமல் இருந்தால், ஏதோ ஒரு வழியில் அவர்கள் தப்பித்து விடுவார்கள். நான் ஒரு ஜாதகத்தைப் பார்த்தேன். அதில் சுக்கிரன் மிகவும் வலிமை குறைந்தவராக இருந்தார். அந்த தம்பதிகளுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு குறைவாகவும், ஒருவரை ஒருவர் குறை சொல்வதாகவும் அமைந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு நான்கு குழந்தைகள். விவாகரத்து போன்ற எந்தப் பிரச்னைகளும் வரவில்லை என்றாலும், அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருக்கும். ஜாதகத்தில் ஏழாம் இடம் வலுவாக இருந்தது. சுபக்கோள்கள் அந்த ஏழாம் இடத்தை பார்த்துப் பலப்படுத்தி இருந்தனர். குடும்ப அதிபதியோடு ஏழாம் அதிபதி தொடர்பு கொண்டிருந்தார். அந்த ஜாதகத்தில் ஐந்தாம் இடம் சற்று வலிமை குறைந்து இருந்தாலும், புத்திர காரகனாகிய குரு வலிமை படைத்தவராக இருந்தார். அவர்களுக்கு தாம்பத்திய உறவில் சில சிக்கல்கள் இருந்தாலும், அன்னியோன்யம் குறைந்து இருந்தாலும், சண்டைகள் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இருந்தது. குடும்பமும் பிரியாமல் இருந்தது. காரணம், சுக்கிரனுடைய பலவீனங்களை எல்லாம் குரு சரி செய்து கொண்டிருந்தார். குரு வலுவாக இருந்ததால், குழந்தைகள் நன்றாக அமைந்தார்கள். தசையும் குரு தசையாக இருந்தது. சுப தசையான குருதசை, 16 ஆண்டுகள் நடந்ததால் கிட்டத்தட்ட 50 வயது வரை அவர் காலத்தை ஓட்டிவிட்டார்.

அதற்கு பிறகு சனி தசை, புதன் தசை, கேதுதசை என்று வரிசையாக வந்தது. சுக்கிரதசைக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதனால், சுக்கிரன் கெட்டுப் போயிருந்தாலும்கூட முழுமையாக அந்த ஜாதகரை பாதிக்கவில்லை. அடுத்து இன்னொரு விஷயத்தையும் முக்கியமாக பரிசீலனை செய்ய வேண்டும். எந்தக் கிரகமாக இருந்தாலும், எந்த பாவமாக இருந்தாலும், அது ஒரு அளவுக்கு மேல் வலிமை பெறக் கூடாது. எப்படி ஒரு கிரகம் வலிமை இழந்தால் பலவிதமான சங்கடங்களைச் செய்யுமோ, அதைப் போலவே அதீத வலிமை படைத்த கிரகங்களும் ஒரு ஜாதகருக்கு பெரும் நன்மையைச் செய்யாது, சங்கடங்களைத் தரும். அதிலும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் அதிக வலுவோடு இருப்பது சில சங்கடங்களைத் தரும். அதுபோல, சுக்கிர பலவீனங்கள் சில நன்மைகளையும் செய்யும்.ஒரு உதாரண ஜாதகம். கும்ப லக்கனம், 12ல் சுக்கிரன். விரய ஸ்தானத்தில் சுக்கிரன் என்பார்கள். களத்திராதிபதி களத்திரகாரகன் விரயம் ஏறுவது சுபபலம் அல்ல என்று கூடச் சொல்வார்கள். ஜாதகருக்கு திருமண வயதில்தான் சுக்கிர தசையும் வந்தது. அதாவது ஜாதகரின் 19 அல்லது 20 வயதில் வந்த சுக்கிரதசை 40 வயது வரை நீடித்தது. இந்த தசையில், ஜாதகர் பலவிதமான நன்மைகளை அடைந்தார். படிப்பு முடித்தார். உத்தியோகம் கிடைத்தது. திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தார்கள். இப்படி வாழ்வின் முக்கியமான கட்டங்கள் இந்த இருபதில் இருந்து 40 வயதுக்குள்தான் நடந்தன. அதுவும் 12ல் உள்ள சுக்கிரதசையில். கும்ப லக்கினத்திற்கு பாக்யாதிபதியான சுக்கிரன், பாதகாதிபதியாகவும் இருக்கின்றார். (கும்பம் – ஸ்திர லக்கினம் 9க்குரியவன் பாதகாதிபதி) அதைப் போலவே அவர் சுகாதிபதியாகவும் இருக்கின்றார்.

பாக்கியாதிபதி பாதகாதிபதியாகவும் இருப்பதால், அவர் மிக வலிமை பெறாமல் விரயம் ஏறியது ஜாதகருக்கு நன்மையைத்தான் செய்தது. ஒருவேளை, சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று மிகுந்த பலம் பெற்று இருந்தால், இந்த நன்மைகள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். சுக்கிரன், கும்ப லக்னத்திற்கு நான்காம் இடத்துக்கு உரியவர் என்பதால், நான்காம் அதிபதி விரயம் ஏறியதால், பூர்வீக சொத்துக்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோலவே, நான்காம் இடம் என்பது தாயாருக்கான இடம் என்பதால், தாயாரோடு சேர்த்து இருக்கக்கூடிய வாய்ப்புகள் (உத்தியோகம் கிடைத்ததால்) இழக்க வேண்டிய தாயிற்று. தாயாரின் உயிருக்கு பாதிப்பு இல்லையே தவிர, நான்காமாதி 12ல் இருப்பதால், (பாவ காரகத்துவம்) தாயாருக்கும் ஜாதகருக்கும் ஒரு பிரிவு கடைசி வரை இருந்து கொண்டே இருந்தது. ஒருசில வாரங்களோ, அதிகபட்சம் ஒருசில மாதங்களோதான் ஜாதகரோடு அவருடைய தாயார் இருக்கக் கூடிய சூழ்நிலை அமைந்தது. ஏதோ ஒரு தேவைக்காக அவர் வேறு ஊரில் சென்று வசிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது (மற்ற சகோதரர்கள் அழைப்பார்கள் அல்லது அவர்கள் குடும்பத்திற்கு இவருடைய உதவி தேவைப்படும்) இந்த ஜாதகத்தில் சுக்கிரனுக்குரிய களத்திர காரகத்தைவிட, சுக்கிரனுடைய நான்காம் பாவத்தின் காரகம் நன்கு வேலை செய்தது.

அதிலும் நான்காம் இடத்தில் வீடு, கல்வி, தாய் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. இப்பொழுது ஒரு சிறிய சந்தேகம் வரலாம். நான்காம் பாவாதிபதி 12ல் மறைந்ததால், தாயார் பிரிந்தாரே தவிர, அவருக்கு உயிர் ஆபத்து எதுவும் இல்லாமல் இருந்தாரே, ஏன் என்று கேட்கலாம்.உயிர் ஆபத்து கொடுக்காது. காரணம், மாத்ருகாரகன் என்று சொல்லக்கூடிய சந்திரன், நீச்சபங்க ராஜயோகம் பெற்று வலிமையோடு இருந்தார். எனவே சுக்கிரனால் தாயாருக்கு உயிர் ஆபத்து தர முடியவில்லை. அதைப் போலவே, கல்விக்கான புதன் வலிமையாக இருந்ததாலும், புத ஆதித்ய யோகம் செயல்பட்டதாலும் படிப்பில் கை வைக்க முடியவில்லை. வீடு, மனை முதலிய விஷயங்களுக்கு காரகத்துவம் படைத்த செவ்வாய் உச்சம் பெற்று இருந்ததால், வீடு வாசல் வாங்குவதிலும் கை வைக்க முடியவில்லை.சுக்கிரனால் பூர்வீகச் சொத்து என்று எதுவும் தரமுடியவில்லையே தவிர, சொத்துக் களைத் தராமல் இருக்க முடியவில்லை. இதிலும் ஒரு நுட்பத்தைப் பார்க்க வேண்டும். சொத்துக்களை ஜாதகர் வாங்கினாரே தவிர, எந்த சொத்துக்களும் அவர் பெயரில் இல்லை. காரணம், சுக்கிரன் 12ஆம் இடத்தில் விரயம் ஏறியதுதான். இத்தனை நிகழ்ச்சிகளும் நடந்தது சுக்கிரனுடைய தசையில் என்பதை கவனத்தில் கொண்டால், சுக்கிரன் எப்படி எல்லாம் ஒரு ஜாதகத்தில் நேர் பலனையும், மறைமுகப் பலனையும் தந்து ஆடுவார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

 

The post சுக்கிரன் நன்மையைச் செய்வாரா? செய்யமாட்டாரா? appeared first on Dinakaran.

Read Entire Article