சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்

1 month ago 9

கேடிசி நகர்: பாளையங்கோட்டையிலிருந்து சீவலப்பேரிக்கு செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மணல் பரப்பு நிறைந்த பகுதி என்பதால் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தைப் போல் பெரிய பாலமாக கட்ட முடியாமல், சிறிய பாலமாக கட்டியுள்ளனர். அந்தப்பகுதியில் மணல் பரப்பு அதிகமாக இருப்பதால் கோவில்பட்டி, ராஜபாளையம், சீவலப்பேரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ஏராளமான உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மணல் பரப்பு அதிகமாக இருப்பதால் அந்தப்பகுதியில் ஆற்று நீர் சுத்தமாக காணப்படுவதால், சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து குளிப்பது வழக்கம்.

கடந்த நவம்பரில் பெய்த கனமழையால் பாலத்தின் தடுப்பு சுவர்கள் உடைந்து விட்டன. மேலும் அங்கு குடிநீர் குழாய்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதனால் தற்போது தற்காலிகமாக பார்க்கின் மேல் பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்டு, குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. பாலத்தில் தடுப்பு சுவர்கள் கட்டப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தற்போது மணல் மூடைகளை வைத்து பாலத்தின் இரு புறமும் அடுக்கியுள்ளனர். எனவே சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அப்பகுதியில் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட படித்துறை ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் குளிக்க வருபவர்கள் வாகனங்களை ஆற்றுப்பாலத்தின் அருகே நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தண்ணீர் செல்லும் பாதையை கணக்கிட்டு படித்துறையை அமைத்துள்ளதாக கூறுகின்றனர். பாலத்தின் மேல் பகுதியில் தெற்கு பக்கமாக படித்துறை அமைத்தால் குளிக்க வருவபவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும், எனவே உயிர்ப்பலியை தடுப்பதற்காக பாலத்தின் இரு புறமும் தடுப்பு சுவர்கள் அமைத்து, பொதுமக்கள் குளிப்பதற்கும் படித்துறை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.

The post சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article