
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையானது. சீமானின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ராயப்பேட்டை பகுதியில் வைத்து சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு திட்டமிட்ட 10 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீமான் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.