சீனாவில் வங்கதேச தலைவர் கூறிய சர்ச்சை கருத்து; வடகிழக்கு மாநில தலைவர்கள் கொந்தளிப்பு: இந்திய வெளியுறவு கொள்கை குறித்து விமர்சனம்

22 hours ago 3


இம்பால்: சீனாவில் வங்கதேச தலைவர் கூறிய சர்ச்சை கருத்துக்கு வடகிழக்கு மாநில தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு கொள்கை குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசினா கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதனால் வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் சீனாவிற்கு சென்றார். அங்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு கடல்வழி போக்குவரத்து வசதியில்லை. அதேநேரம் கடற்கரையைக் கொண்ட நாடாக வங்கதேசம் உள்ளது. மேற்கண்ட ஏழு மாநிலங்களின் கடல்வழி பாதுகாவலராக வங்கதேசம் உள்ளது. இந்த 7 மாநிலங்களும் கடல்வழிப் பாதையை அணுக முடியாது. இதனை சீனா பொன்னான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.

சீனா தனது பொருளாதார சக்தியைக் காட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் நாங்கள் எங்களது உற்பத்தியை அதிகரித்து, பொருட்களை சந்தைப்படுத்த முடியும்’ என்று அவர் கூறினார். இவரது பேச்சுக்கு வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீனாவுடனான நட்பு கொண்டுள்ள முகமது யூனுஸ், ‘எந்த உரிமையின் அடிப்படையில் வடகிழக்கு மாநிலங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து திரிபுராவின் திப்ரா மோட்டா கட்சியின் தலைவரும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான பிரத்யோத் தேபர்மா மாணிக்யா அளித்த பேட்டியில், ‘சிக்கன் நெக் காரிடாரில் இந்திய ராணுவத்தை நிறுத்த வேண்டும். இந்தியா – வங்கதேசம் எல்லையில் வலுவான பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்த முறை வங்கதேசத்தை இரண்டாக உடைக்க வேண்டும்.

அதன்பின் வடகிழக்கு மாநிலங்களுக்கான கடல்வழி பாதையை உருவாக்க வேண்டும். கடந்த 1947ம் ஆண்டு வங்கதேசத்தில் அமைந்துள்ள சிட்டகாங் துறைமுகத்தை, அவர்களுக்கு விட்டுக்கொடுத்தது மிகப்பெரிய தவறு’ என்றார். அதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மணிப்பூர் முன்னாள் முதல்வர் என்.பிரேன் சிங் உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். மேலும் அசாம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஜோர்ஹாட் நாடாளுமன்ற உறுப்பினருமான லூரின் ஜோதி கோகோய் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை இந்த அளவுக்குக் கீழிறங்கியது வருந்தத்தக்கது.

வங்கதேச விடுதலைக்காகப் போராடியது இந்தியா; ஆனால் இப்போது வங்கதேசம், ஒரு எதிரி நாட்டுடன் கைகோர்ப்பது கொடூரமானது’ என்று கூறினார். மேலும் காங்கிரஸ் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு பலவீனமாகிவிட்டது என்பதை முகமது யூனுஸின் கருத்துக்கள் காட்டுகின்றன’ என்று ஒன்றிய பாஜக அரசை விமர்சித்துள்ளது.

The post சீனாவில் வங்கதேச தலைவர் கூறிய சர்ச்சை கருத்து; வடகிழக்கு மாநில தலைவர்கள் கொந்தளிப்பு: இந்திய வெளியுறவு கொள்கை குறித்து விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article