
சோமவார விரதம் மேற்கொள்ளும் அதேநாளில் சிவாலயங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். ஓம் காரம் நிரம்பிய வலம்புரி சங்கில் நிரப்பப்படும் நீர் கங்கைக்கு இணையான புனிதத்தன்மை கொண்டதாகும். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்வதால் பரமானந்தத்தை வழங்குவார் என்பது நம்பிக்கை. அதே போல் கடலில் தோன்றியதால் வலம்புரி சங்கு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டதாகும். இதனால் வலம்புரி சங்கில் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் குறையாத செல்வத்தை சிவன் அருள்வார் என்பது நம்பிக்கை.
கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நேரம் 'திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.
இந்நாளில் சிவனின் உடல் அதிக வெப்பத்தை தாங்கும் விதமாக, கார்த்திகை திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) அபிஷேக பிரியரான சிவனை குளிர்விக்கும் பொருட்டு, சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.
சங்கில் நிரப்பப்பட்டு மந்திர சக்தி மிக்க தீர்த்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யும் போது சிவ பெருமானின் மனமும், திருமேனியும் குளிர்ந்து விடும். இதனால் தன்னுடைய அருட்கருணையால் இந்த பூமியையும் மழையால் ஈசன் குளிர செய்வார், நம்மை வாழ்விலும் குளுமையையும், செழிப்பையும் ஏற்படுத்துவார் என்பது நம்பிக்கை.
சங்காபிஷேகம் பார்த்தால் கஷ்டங்கள் விலகும், இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும் என்பது நம்பிக்கை. தேவையான அளவுக்கு மழை பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்கமாகும். சங்கு, செல்வத்தின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வார்கள். அப்படி தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்,
வலம்புரி சங்கில் பாலை நிரப்பி, இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். அதில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால், பிறவி பிணியை அறுக்கலாம் என்று பத்ம புராணம் கூறுகிறது. ஏழு பிறவிகளில் செய்த வினைகளில் இருந்து மீளலாம் என்று கந்த புராணம் சொல்கிறது. இதன் காரணமாகவே சங்காபிஷேகம் பெரிய பெரிய சிவாலயங்களில் நடத்தப்படுகிறது.
கார்த்திகை சோம வாரத்தில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி புஷ்பங்கள் வைப்பார்கள். ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாகணம் செய்து வேதபாராயணங்கள் செய்து, பின்பு அந்த நீரைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை சோமவாரத்தில் நடக்கும் சங்காபிஷேகத்தை தரிசிப்பது பெரும் புண்ணியமாகும்.