சிவன் கோவிலில் வழிபடும் முறை

1 week ago 6

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்குரிய பலா பலன்களை அள்ளித் தரக்கூடியவர் சிவபெருமான். அவரை ஆலயங்களில் எவ்வாறு வழிபட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

சிவன் கோவிலை அடைந்ததும் ராஜகோபுரத்தை வணங்கி விட்டுதான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவேதான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரியும் பலிபீடத்தின் அருகில், தரையில் விழுந்து வணங்கவேண்டும். நமது உடலில் உள்ள அனைத்து கெட்ட எண்ணங்களையும் அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

பலிபீடத்தை தாண்டியதும் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். பிறகு சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் 'முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போடவேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள அம்பிகை, சுப்பிரமணியர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும். இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேஸ்வரரை கடைசியாக வழிபடவேண்டும். அவருக்கு முன் நின்று இரு கை குப்பி வணங்கி நன்றி சொல்லி வெளியே வர வேண்டும்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது சிறிது நேரம் உட்கார்ந்து, பிரார்த்தனை செய்து, பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்யவேண்டும். பெண்களாக இருந்தால் கை, கால்கள், தலை ஆகியவற்றை தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். 

Read Entire Article