அமராவதி: ஆந்திரா மாநிலம் அண்ணமயா மாவட்டத்தில் சிவராத்திரியையொட்டி சிவன் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் யானைகள் புகுந்து தாக்கியதில் 3 பக்தர்கள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் அண்ணமயா மாவட்டம் குண்டலக்கோனாவில் சிவன் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் பாத யாத்திரையாக வனப்பகுதி வழியாக செல்வது வழக்கம். அவ்வாறு நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக சிவன் கோயிலில் பூஜை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பக்தர்கள் உள்ள பகுதிகளுக்கு வந்த காட்டு யானைகள் பக்தர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இதில் தினேஷ், மங்கம்மாள், திருப்பதி செங்கராயுடு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மற்ற பக்தர்கள் கோசம் எழுப்பி யானைகளை விரட்டினர். இதையடுத்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானை நடமாட்டத்தை கண்காணித்து ஒழுங்குபடுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் உணவு பற்றாக்குறை காரணமாகவே வனவிலங்குகள் மக்கள் இருக்கும் இடங்களுக்கு வருவதால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், எனவே வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சிவன் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்றபோது பரிதாபம்.. ஆந்திராவில் யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.