சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் இருந்த வயதான தம்பதியை அடித்து கொன்று நகை கொள்ளை

3 weeks ago 4

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் (47) என்ற மகனும், பானுமதி (50) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் கவிசங்கர் திருப்பூர் மாவட்டம் முத்தூரிலும், மகள் பானுமதி கணவருடனும் வசித்து வருகின்றனர். ராமசாமி, அவரது மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வந்தார். ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு இவர்கள் வெளியே வரவில்லை. மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் எடுக்காததால், சந்தேகமடைந்த அவர், அருகில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறி உள்ளார். அவர்கள் நேற்று முன்தினம் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

தகவலின்பேரில் சிவகிரி போலீசார் வந்து பார்த்தபோது ராமசாமி வீட்டிலும், பாக்கியம் வீட்டுக்கு வெளியேயும் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி, தங்கவளையல் உள்பட பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது.

தகவலறிந்து எஸ்பி சுஜாதா கொலை நடந்த வீடு, தோட்டத்தில் ஆய்வு செய்து ராமசாமியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்தார். கொலையாளிகளை பிடிக்க கூடுதல் எஸ்பி விவேகானந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் பல்லடம் அருகே தாய், தந்தை, மகன் என 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் இருந்த வயதான தம்பதியை அடித்து கொன்று நகை கொள்ளை appeared first on Dinakaran.

Read Entire Article