சிவகங்கையில் டிச.14ல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

1 month ago 4

சிவகங்கை, டிச.9: சிவகங்கையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் டிச.14 அன்று மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துடன் போதை பொருள்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் டிச.14 அன்று மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

போட்டியில் கலந்து கொள்ள பள்ளி, கல்லூரிகளில் நேரடியாக பயிலும் 14வயதிற்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிலையம் மூலம் பதிவு செய்ய வேண்டும். 18முதல் 30வயதுடைய தன்னார்வலர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். இப்போட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி இரு பாலருக்கும் 5 கி.மீ தொலைவில் நடைபெறவுள்ளது. முதல் மூன்று இடங்களில் வரும் நபர்களுக்கு பதக்கம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ், முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் ஆறுதல் பரிசாக ரூ.1,000 ரொக்கத் தொகையாக வழங்கப்படும்.

அதுமட்டுமன்றி, போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயரினை https//sivaganga.nic.in தரவுத்தளத்தில் டிச.12அன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு, பதிவு செய்ய இயலாதவர்கள் போட்டி நாளான டிச.14 அன்று காலை 5மணிக்கு முன் வருகை புரிந்து பதிவு செய்து பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சிவகங்கையில் டிச.14ல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article