சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள் வழக்கத்துக்கு மாறாக, மரக்கிளைகளுக்கு பதில், மரத்தின் உச்சிகளில் கூடு கட்டி முட்டை வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
38.4 ஏக்கரில் அமைந்துள்ள அந்த சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்காகவே கடந்த 55 ஆண்டுகளாக தீபாவளி, திருவிழா உள்ளிட்ட எந்த விசேஷத்துக்கும் பட்டாசு வெடிப்பதில்லை என்று கூறியுள்ள அப்பகுதி மக்கள், இந்தாண்டு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சாம்பல் கூழைக்கடா, சின்ன சீழ்க்கைச் சிறகி, நீலச்சிறவி, நத்தை குத்தி, நாரை நாமக்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, உண்ணிக்கொக்கு, பாம்புத்தாரா, சிறிய நீர்க்காகம், முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகள் மரத்தின் உச்சியில் கூடு கட்டி சராசரியாக 3 முட்டைகளை இட்டு வருவதாக கூறியுள்ளனர்.
மரத்தின் உச்சியில் பறவைகள் கூடு கட்டியிருப்பதால் வடகிழக்குப் பருவ காலத்தில் அதீத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என்று தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இதே போன்று 2004-இல் நடந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.