சிவகங்கை, பிப்.17: சிவகங்கை அருகே டி.புதூர் தர்மமுனீஸ்வரர், இளங்கரைமுடைய அய்யனார், சோனையா, சிவசக்தி விநாயகர் கோயில்களில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. கோயில் வழிபாடு முடிந்ததும் கிராம மக்கள் ஊர்வலமாக வந்து மஞ்சுவிரட்டு திடலில் காளைகளுக்கு மரியாதை செய்தனர். தொழுவில் இருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன.
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 420 காளைகள் அவிழ்க்கப்பட்டன. மொத்தம் 82 பேர் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வயல்வெளிகளில் ஆங்காங்கே கட்டுமாடுகளாக 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாடுகள் முட்டியதில் 54 பேர் காயமடைந்தவர்களுக்கு அங்குள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 7 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
The post சிவகங்கை அருகே மாசி களரி திருவிழாவில் மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.