புதுடெல்லி: மக்களவை உறுப்பினர்கள் தங்களது இருக்கையில் இருந்தே வருகையை பதிவு செய்ய ‘பயோமெட்ரிக்’ வசதி வருகிற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவையில் தற்போது அமலில் உள்ள நடைமுறைப்படி, கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) அவைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்திட்டால்தான், அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகக் கருதப்பட்டு, தினசரி படி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். ஆனால், காலை 11 மணிக்கு ஒரே நேரத்தில் பல எம்.பி.க்கள் வருவதால், வருகை பதிவேடு அருகே கூட்டம் கூடுவதும், அவசரத்தில் பலர் கையெழுத்திட முடியாமல் கூட்டத்தொடரைத் தவறவிடும் நிலையும் ஏற்படுகிறது.
மேலும், சில எம்.பி.க்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட உடனேயே, கூட்டத்தொடரில் பங்கேற்காமல் திரும்பிச் செல்வதாகவும் புகார்கள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா புதிய முன்னெடுப்பு ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதன்படி, எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளிலேயே ‘மல்டி மாடல் டிவைஸ்’ என்ற உயர் தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், எம்.பி.க்கள் மூன்று வழிகளில் தங்கள் வருகையைப் பதிவு செய்யலாம். அதாவது எம்பிக்களுக்கு வழங்கப்படும் மல்டி மீடியா கார்டு மூலம் வருகை பதிவை பதிவு செய்யலாம். அடுத்ததாக பிரத்யேக ‘பின்’ எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் வருகையை பதிவு செய்யலாம். மூன்றாவதாக பயோமெட்ரிக் முறையில் தங்கள் கைரேகையைப் பதிவு செய்யலாம்.
இந்த புதிய முறை, வரும் 21ம் தேதி தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படுகிறது. மழைக்காலக் கூட்டத்தொடரில், பழைய பதிவேடு முறையும், இந்த புதிய டிஜிட்டல் முறையும் ஒருசேர செயல்பாட்டில் இருக்கும். புதிய முறை குறித்து எம்.பி.க்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், குளிர்காலக் கூட்டத்தொடரில் இருந்து இது முழுமையாக அமல்படுத்தப்படும். எம்.பி.க்கள் தங்கள் இருக்கைக்குச் சென்று வருகையைப் பதிவு செய்வதால், அவையில் அவர்களின் வருகை எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற வசதி மாநிலங்களவையிலும் கொண்டுவரப்படுமா? என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
The post சிலர் கையெழுத்திடாமல் செல்வதால் குளறுபடி; எம்பிக்கள் வருகை பதிவுக்கு ‘மல்டி மாடல் டிவைஸ்’: மழைக்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் appeared first on Dinakaran.