நன்றி குங்குமம் தோழி
தமிழ் இலக்கியங்களில் முதல் தேசிய காப்பியமான சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களில் காலத்தால் முந்தியது. கண்ணகியின் கால் சிலம்பால் எழுந்த வரலாற்றை கூறுவதால் ‘சிலப்பதிகாரம்’ எனும் பெயர் பெற்றது. தமிழின் ஊற்றாக ததும்பும் சிலப்பதிகாரத்தினை இரண்டாம் நூற்றாண்டில் சீத்தலைத் சாத்தனார் வேண்டுகோளின்படி இளங்கோவடிகள் இயற்றினார். காவேரிப்பூம்பட்டினத்தின் கற்புக்கரசி கண்ணகி, அவளது கணவன் கோவலன் ஆகியோரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒப்பற்ற காப்பியமாகும். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழால் சங்கமிக்கும் உன்னத காவியம். 5,270 அடிகள் கொண்ட இந்தக் காப்பியத்தினை மனப்பாடம் செய்து கற்பிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை எளிதாக்கி சாதனை படைத்துள்ளனர் அரசுப் பள்ளி மாணவிகளான வேணி மற்றும் வீரச்செல்வி.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ந.சுப்பையாபுரம் அரசுப் பள்ளியில்தான் இவர்கள் இருவரும் பயில்கிறார்கள். இவர்கள் இருவரும் சிலப்பதிகாரம் முழுவதையும் 4 மணி, 6 நிமிடங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பாராயணம் செய்து சாதனைப் படைத்துள்ளனர். இவர்களின் சாதனை ‘ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அப்பள்ளியின் தமிழாசிரியர் ராஜசேகர் மூன்று வருட முயற்சிக்கு மாணவிகள் கரம் கொடுத்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள். இவர்களின் சாதனைப் பற்றி அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றிருந்த போது மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.
‘‘எங்கப் பள்ளியில் படிக்கும் மாணவிகளான வீரச்செல்வி, வேணி இருவரும் கடந்த மூன்று வருடமாக தொடர் பயிற்சி எடுத்துக் கொண்டனர். அவர்களின் கடும் முயற்சிதான் எங்களை இந்த சாதனையை நிகழ்த்த வைத்தது’’ என்று பேசத் துவங்கினார் தமிழாசிரியர் ராஜசேகர். ‘‘இவர்கள் இருவருக்கும் தமிழ் பாடம் மேல் பற்று அதிகம். அதைத் தெரிந்து கொண்டு நான்தான் இவர்களை இதனை செய்யச் சொல்லி ஊக்குவித்தேன். மூன்று வருடம் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் பள்ளிக்கு இருவரும் வந்திடுவார்கள். அவர்களுக்கு நான் சிலப்பதிகாரத்தின் 5,270 அடிகள் கற்றுக் கொடுத்தேன். அவர்களும் விடுமுறை நாட்கள் மட்டுமில்லாமல் பள்ளி இயங்கும் காலத்திலும் காலை, மாலை என கூடுதல் நேரம் ஒதுக்கி, சிலப்பதிகாரத்தினை படித்தனர்.
வீரச்செல்வி தன் மூன்று வயதில் தன் தந்தையை இழந்தவர். அவரின் அம்மா பட்டாசு தொழிற்சாலையில் கூலிக்கு வேலை பார்க்கிறார். அவரது சம்பாத்தியத்தில்தான் வீடு இயங்குகிறது. மாணவி வேணியின் பெற்றோர் இருவருமே கூலி வேலைக்கு செல்கிறார்கள். தன் பெற்றோர் படும் கஷ்டத்தை இருவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் கல்வியின் மதிப்பு அவர்களுக்குத் தெரியும். பெற்றோர்கள் போல் கூலி வேலைக்கு போகாமல் நல்ல வேலைக்கு செல்ல கல்வி அவசியம். அதன் முதல் படிதான் இவர்கள் தங்களுக்காக இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
சிலப்பதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு காதையையும் இரண்டு மாணவிகளும் தனித்தனியாக படித்தார்கள். பிறகு ஐந்து, பத்து என படித்தனர். அதன் தொடர்ச்சியாக முப்பது காதைகள் முழுதும் மனப்பாடமாக ஒப்பித்தார்கள். நான் அவர்களுக்கு ஒவ்வொரு காதைகளை நடத்தும் போதும் அதன் பொருளினை கதைப்போல் அவர்களுக்கு விளக்குவேன். அதற்கு பிறகு ஒவ்வொரு அடியின் உச்சரிப்பினை எவ்வாறு தெளிவாக கூறவேண்டும் என்று சொல்லித் தருவேன். வார்த்தையின் உச்சரிப்பு முதலில் சரியாக வராது. அதனால் பல முறை சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு சரியான உச்சரிப்பு வரும் வரை பயிற்சி அளிப்பேன். சில காதைகள் புரியவில்லை என்று சொல்வார்கள். அதை மீண்டும் அவர்களுக்கு புரியும்படி சொல்லித் தருவேன்.
பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினாலும், எனக்கும் மற்ற வேலைகள் இருக்கும். அந்த வேலைகளை மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதை பாதிக்காமல் பார்த்துக் கொண்டேன். அதற்கு என் மனைவி மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். என்னால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத நேரத்தில் நான் காதைகளை பதிவு செய்து வைத்திடுவேன். அதனை என் மனைவி அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு காதையினை அவர்கள் படித்து முடித்தவுடன் அவர்களை மேலும் ஊக்குவிக்க புத்தகம், பேனா அல்லது ஊக்கத் தொகை என பரிசளித்தேன். அது அவர்களுக்கு உற்சாகத்தினை கொடுத்தது. மிகவும் சிரமத்துடன் படித்தார்கள்.
எல்லாவற்றையும் விட சாதனையை நிகழ்த்த சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்வதாக வாக்களித்திருந்தேன்’’ என்றவர், மாணவிகளின் பெயர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது
மட்டுமில்லாமல் சிலப்பதிகார தூதுவர்கள் என்ற பட்டமும் வழங்கப்பட்டதாக கூறியவரை தொடர்ந்தார் ஒன்பதாம் வகுப்பு மாணவியான வீரச்செல்வி.‘‘நான் சிலப்பதிகாரத்தினை முழுமையாக பயில காரணம் எங்களின் தமிழாசிரியர்தான். மூன்று வருடமாக விடுமுறை பாராமல் பயிற்சி எடுத்தேன். தமிழ் ஐயாவும் விடுமுறை நாட்களில் எங்களுக்காக பள்ளிக்கு வந்து சொல்லிக் கொடுப்பார். சில சமயம் தொய்வு ஏற்படும் போது பேனா, புத்தகம் என பரிசு தந்து எங்களை உற்சாகப்படுத்துவார்.
நாங்க 15வது காதை படிக்கும் போது மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறினார். சொன்னது போல் அழைத்தும் வந்தார். தமிழய்யாவின் மனைவி அவர்களும் எங்களின் சாதனையை பாராட்டி தங்க கம்மலினை பரிசாக கொடுத்தார். இருவரும் எங்களை ஊக்கப்படுத்தியதால்தான் எங்களால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது’’ என்றார்.
‘‘நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். முதலில் தமிழய்யா இரண்டு மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்தார்.
அதைப் பார்த்த எனக்கும் அதே போல் வேறு காவியம் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது’’ என்று பேசத் துவங்கினார் வேணி. ‘‘என் விருப்பத்தை நான் தமிழய்யாவிடம் கூறினேன். அவர் உனக்கு சிலப்பதிகாரம் சொல்லித் தருகிறேன் என்றார். முதலில் எனக்கு அதை பயில முடியுமான்னு எண்ணம் ஏற்பட்டது. ஒரு முறை ஆசிரியர் சிலப்பதிகாரத்தின் இருபது காதைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக சொன்னார்.
அதைக் கேட்ட பிறகு எனக்கு அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மூன்று வருடம் நானும் வீரச்செல்வியும் ஆசிரியரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டோம். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நவம்பர் மாதம் 9ம் தேதி சிலப்பதிகாரத்தினை நாங்க இருவரும் முழுமையாக ஒப்பித்தோம். நாங்க இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவங்க. எங்க பெற்றோர் கூலி வேலை பார்ப்பவர்கள். சாதாரண மாணவிகளான எங்களை சாதனை மாணவியாக மாற்றிய முழு பெருமை தமிழாசிரியர் மற்றும் அவரின் துணைவியார் இருவருக்கும்தான் சேரும். இந்த நிகழ்வினை எங்களின் வாழ்நாளில் மறக்கவே முடியாது’’ என்றார்.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்
The post சிலப்பதிகார தூதுவர்களாக அரசுப் பள்ளி மாணவிகள்! appeared first on Dinakaran.