திருப்பூர்: சிலந்தி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டினால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்லுயிர் பாதிப்பு ஏற்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது. அமராவதி ஆறு மற்றும் அமராவதி அணையின் மிக முக்கியமான நீர் ஆதாரமாக கேரளாவில் உள்ள சிலந்தி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசு முடிவு செய்து, பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலம் பாதிக்கப்படும் மற்றும் விலங்குகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என செய்திகள் வெளியானது. இதனையறிந்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக வழக்குப்பதிவு செய்தது. மேலும், கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தடுப்பணை கட்டுவதை தடுக்கக்கோரி தலைமை வன பாதுகாவலர் சீனிவாஸ் ராமசந்திர ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டினால் ஆனைமலை புலிகள் காப்பகம் கடுமையாக பாதிக்கப்படும். தற்போதைய சுற்றுச்சூழல் பாதித்து புலிகள் இடம் பெயர்வு இல்லாமல் போகும். புலிகள் எண்ணிக்கையும் குறையும். பல்லுயிர்கள் பாதிப்பு ஏற்படும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதுபோன்ற நியாயமான கோரிக்கைகள் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அணை கட்டப்படுவது தடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.
The post சிலந்தி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டினால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்லுயிர் பாதிப்பு ஏற்படும்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வனத்துறை தகவல் appeared first on Dinakaran.