சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

10 hours ago 2

மதுரை : 2016-21 காலகட்டத்தில் சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மத்திய சிறையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.1.60 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில், மதுரை சிறை முன்னாள் எஸ்பி ஊர்மிளா, ஜெயிலர் வசந்த கண்ணன், சங்கரசுப்பு, சாந்தி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஊர்மிளா, தற்போது கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக உள்ளார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா மற்றும் சங்கரசுப்பு, சீனிவாசன், சாந்தி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், “சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்தது, மூலப்பொருட்களை கொள்முதல் செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மோசடி நடந்ததாக பதிவான வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2016-21 காலகட்டத்தில் சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் மனுதாரர்கள் முன்ஜாமீன் கோருவது ஏற்புடையதல்ல. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” என குறிப்பிட்டார்.

The post சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article