பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்துக்குமேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இங்கு கழிப்பிடம், மருத்துவ முதலுதவி சிகிச்சை மற்றும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 6 வாரங்கள் தொடர்ந்து வந்து நெய்தீபம் ஏற்றி முருகனை வழிபட்டால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதிலும் முக்கியமாக முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சிறுவாபுரி முருகன் கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவும் முருகனை தரிசிக்கவும் சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர். கோயிலில் பொது தரிசனம், ரூ.50, ரூ.100 கட்டண தரிசன என அனைத்து வரிசைகளிலும் ஏராளமான பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருப்பு மண்டபத்தில், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பலர், புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழிலில் சிறந்து விளங்க பலர், தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக, கோயிலின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில், பலருக்கு அன்னதான பிரசாதங்கள், சாக்லெட் உள்பட பல்வேறு உணவு மற்றும் குளிர்பான பொருட்களை வழங்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கினர். இக்கோயிலுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள், மருத்துவ முதலுதவி சிகிச்சை மற்றும் கழிப்பிட, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.