
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் தனுஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண் விஜயஸ்ரீ ஆகியோரது காதல் விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரான தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்திச் செல்லப்பட்ட விவகாரமும் அது தொடர்பான வழக்கில் தமிழக ஆயுதப்படை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று பிற்பகலில் சீருடையுடன் கோர்ட்டுக்கு வந்த கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்ட பின்னர் தனது சீருடையை மாற்றி விட்டு சாதாரண உடைக்கு மாறினார். அவரை திருவாலங்காடு போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். நேற்று இரவு 8.30 மணி அளவில் சிறுவன் கடத்தப் பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளைகேட்டு அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
நள்ளிரவு 2.30 மணி வரை திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து டி.எஸ்.பி.க்கள் தமிழ்செல்வி, கந்தன், இன்ஸ்பெக்டர் நரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டனர். பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.வுடன் எத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு பழக்கம்? எந்த அடிப்படையில் விஜயஸ்ரீயை மீட்டு கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டீர்கள்? இதற்காக எவ்வளவு பணம் பேரம் பேசப்பட்டது? என்பது போன்ற கேள்விகளை கேட்டனர்.
இதற்கு அவர் அளித்த வாக்கு மூலத்தை வீடியோவாக பதிவு செய்து கொண்ட அதிகாரிகள், கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமின் கைரேகையையும் பதிவு செய்து கொண்டனர். இன்று காலையிலும் 2-வது நாளாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 10 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, திருத்தணி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார் எனத்தெரிகிறது. அதேபோல புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் 10 மணி நேரம் விசாரனை நடைபெற்றது. 10 மணி நேர விசாரணைக்கு பிறகு காவல் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டு சென்றார்.