சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீள ராட்சத முதலை: வனத்துறையினர் மீட்டு பவானிசாகர் அணையில் விடுவிப்பு

6 hours ago 3


மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீளம் உள்ள முதலையை வனத்துறையினர் 6 மணி நேரம் போராடி மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவித்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பட்டக்காரனூர் பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் ஏழு எருமை பள்ளத்திற்கு வரும் நீர் இந்த குட்டைக்கு செல்கிறது.இந்நிலையில் இந்த குட்டையில் முதலையின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சிலநாட்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் முதலையின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் குட்டையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். நேற்று காலை இந்த குட்டையில் முதலையின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் என்.டபிள்யூ.சி.டி குழுவினர் இணைந்து முதலில் மோட்டார்கள் மூலமாக குட்டையில் இருந்த நீர் முழுவதையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.ஓரளவிற்கு குட்டையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு பதுங்கி இருந்த முதலை அருகில் இருந்த புதரில் சென்று மறைந்தது. 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 7 அடி நீளமுள்ள ஆண் முதலையை வனத்துறையினர் மற்றும் என்.டபிள்யூ.சி.டி குழுவினர் பத்திரமாக பிடித்தனர்.பின்னர், கயிறு மூலமாக அதன் வாய் பகுதியை முழுவதுமாக கட்டி வாகனத்தில் ஏற்றினர்.

தொடர்ந்து குட்டையில் பிடிபட்ட முதலையை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட பெத்திக்குட்டை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.நீரை கண்ட உற்சாகத்தில் துள்ளி குதித்து முதலை நீர்த்தேக்க பகுதிக்குள் சென்று மறைந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வந்த குட்டையில் ராட்சத முதலை பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீள ராட்சத முதலை: வனத்துறையினர் மீட்டு பவானிசாகர் அணையில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article