சிறுநீரகப் புற்றுநோய் முக்கிய தகவல்கள்!

2 weeks ago 4

நன்றி குங்குமம் டாக்டர்

சிறுநீரகப் புற்றுநோய் நிபுணர் என். ராகவன்

பொதுவாக ரத்தப்புற்று, வாய்ப்புற்று, வயிற்றுப்புற்றுநோய் போன்றவைகளே அதிகம் காணப்படும். அதிலிருந்து சிறுநீரக புற்றுநோய் மிகவும் அரிதானது. இது உலகளவில் புற்றுநோய் வரிசைகளில் 20- ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், சமீபகாலமாக சிறுநீரகப் புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்றால், இதில் குறைந்தபட்சம் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணத்தை தழுவுகின்றனர். ஏனென்றால், சிறுநீரகப் புற்றுநோயைப் பொருத்தவரை பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால் இந்தநிலை ஏற்படுகிறது. ஆனால், இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்று நோய் அபாயத்தை தவிர்த்துக் கொள்ளலாம். இது குறித்து சிறுநீரகப் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர், மருத்துவர் என். ராகவன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

சிறுநீரகப் புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன?

மனித உடலின் முக்கிய உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று. பொதுவாக ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். இது உடலில் நடைபெறும் ரத்தஓட்டத்தில் இருந்து கழிவுகளை அகற்றி சிறுநீராக அனுப்புவதன் மூலம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறது. அதில் தடை ஏற்படும் வகையில், சிறுநீரகத்தில் சிறுநீரக செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து கட்டிகளை உருவாக்கும்போது அது சிறுநீரக புற்றுநோயாக மாறுகிறது.

சிறுநீரகப் புற்றுநோய் ஏற்பட காரணம் என்னவென்றால், புகைப்பிடிப்பது, மதுஅருந்துவது, உயர்ரத்தஅழுத்தம், உடற்பருமன் போன்றவற்றால் பெரும்பாலும் ஏற்படுகிறது. மற்றபடி இது பரம்பரை நோய் அல்ல. சிறுநீரகப் புற்றுநோயைப் பொருத்தவரை, பெண்களைவிட ஆண்களுக்கே அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது.

இரண்டு சிறுநீரகத்திலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டா?

பொதுவாக, இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றில்தான் புற்று பாதிப்பை ஏற்படுத்தும். மிகவும் அரிதாக இரண்டு சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்படலாம். அல்லது முற்றிய நிலையில் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்படலாம்.

அனைத்து சிறுநீரக கட்டிகளும் புற்றுநோயாகத் தோன்றுமா?

இல்லை. 90% கட்டிகள் புற்றுநோயாக இருப்பினும், சில கட்டிகள் தீங்கற்றவையாக (Benign) இருக்கலாம். ஸ்கேன் மற்றும் பயோப்ஸி மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரகப் புற்றுநோய் வகைகள்

பொதுவாக சிறுநீரக புற்றுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சிறுநீரகத்தில் மூன்று போல் இருக்கிறது. அப்பர் போல், மிடில் போல், லோயர் போல் என்று. அதில், ஏதாவது ஒரு போலில்தான் பெரும்பாலும் புற்று ஏற்படும். இரண்டாவது, சிறுநீரக டியூமர் என்று சொல்லுவோம். அதாவது சிறுநீரகத்தில் கட்டியாக உருவாகி பின்னர் புற்றுநோயாக பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, Clear Cell Renal Cell Carcinoma (RCC) மிகப்பெரிய அளவில் காணப்படும் வகையாகும். இதைத் தவிர, Papillary RCC, Chromophobe RCC போன்ற வகைகளும் உள்ளன.

சிறுநீரகப் புற்றுநோய் உயிருக்கு ஆபத்தானதா?

அனைத்து வகை சிறுநீரகப் புற்றுநோய்களும் ஆபத்தானவை இல்லை. பெரும்பாலானவை குறைந்த தீவிரம் கொண்டவை. சில வகைகள் தீவிரமாக இருக்கலாம், அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.

அறிகுறிகள்

சிறுநீரகப் புற்றுநோயைப் பொருத்தவரை, ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறியும் தெரிவதில்லை. நோய் முற்றிய நிலையிலேயே பலருக்கும் இந்நோய் இருப்பது தெரிய வருகிறது. இதுவும் மரணம் ஏற்பட ஒரு காரணமாகிறது. இருப்பினும், கட்டி பெரிதாக வளரும்போது சில பொதுவான அறிகுறிகளை காட்டுகிறது.

பொதுவான அறிகுறி என்றால் சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் கலந்து வருவதுதான் இதற்கான முதல் அறிகுறி. மற்றபடி ஆரம்பகட்டத்தில் வலியோ, வேறு அறிகுறிகளோ எதுவும் தெரியாது. கட்டி சற்று வளர்ந்த நிலையில், முதுகில் தொடர்ந்து வலி, குறிப்பாக விலா எலும்புகளுக்கு கீழே வலி காணப்படுவது.

அடிவயிற்றில் வீக்கம் காரணமாக வயிற்று வலி ஏற்படுவது.சோர்வு உணர்வு, திடீர் எடை இழப்பு, பசியின்மை, கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை ஏற்படும்.

புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என்னென்ன?

உடல்நிலை பரிசோதனைகளின் போது, அல்ட்ராசவுண்ட், CT ஸ்கேன், MRI மூலம் புற்றுநோயை அடையாளம் காண முடியும். கட்டி இருப்பதாகத் தோன்றினால், உடனே ஒரு சிறுநீரக புற்றுநோய் நிபுணரை (Uro-Oncologist) சந்திக்க வேண்டும்.

சிகிச்சை முறைகள்

பகுதி நீக்கல் (Partial Nephrectomy) – புற்றுநோய் பாதித்த பகுதியை மட்டும் அகற்றி, சிறுநீரகத்தை பாதுகாக்கும் முறையாகும்.முழு நீக்கல் (Radical Nephrectomy) – பெரிய கட்டிகள் அல்லது பெரிய அளவில் பரவிய கட்டிகள் இருந்தால், முழு சிறுநீரகமும் அகற்றப்படும்.

அறுவைசிகிச்சை குறித்து…

தற்போதைய நவீன மருத்துவ முன்னேற்றங்களால், பெரும்பாலான சிறுநீரகப் புற்றுநோய்க்கு ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வயிற்றில் 4-5 சிறிய துளைகள் மட்டுமே செய்யப்படும், இதனால் குறைந்த வலி, விரைவாக சரிசெய்தல் மற்றும் மருத்துவமனையில் தங்கும் காலமும் குறைகிறது. பல்வேறு நோயாளிகள் அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆகும் அளவிற்கு விரைவில் மீள முடிகிறது.

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்புகள்

அறுவை சிகிச்சைக்கு பிறகு, நீக்கப்பட்ட பகுதியின் உடல் திசுக்களை ஆய்வு செய்து, புற்றுநோயின் தீவிர நிலை (Aggressiveness) மதிப்பீடு செய்யப்படும். இதன் அடிப்படையில், மருத்துவர்கள் தொடர்ந்து அடிப்படை பரிசோதனைகள் மற்றும் அடுத்தகட்ட சிகிச்சைகளை பரிந்துரை செய்வார்கள்:

குறைந்த அபாயத்திலுள்ள நோயாளிகளுக்கு வழக்கமான ரத்த பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் செய்யப்படும்.தீவிரமான சிறுநீரக புற்றுநோய்களுக்கு – இம்யூனோதெரபி (Immunotherapy) மற்றும் டைரோசின் கினேஸ் இன்ஹிபிட்டர்ஸ் (TKIs) போன்ற மேலதிக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

ஒரு சிறுநீரகம் நீக்கப்பட்டால், டயாலிசிஸ் தேவைப்படுமா?

பொதுவாக, ஒரு சிறுநீரகம் நீக்கப்பட்டால், மற்றொரு சிறுநீரகம் செயல்படுவதால் டயாலிசிஸ் தேவையில்லை. மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதால், ஒரு சிறுநீரகம் நீக்கப்பட்ட பிறகும் மற்றொன்று முழுமையாக செயல்படும். ஆனால், மிகவும் குறைந்த சில நோயாளிகளுக்கு மட்டுமே சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் தேவைப்படலாம்.

சிறுநீரகப் புற்றுநோயை தடுக்கும் வழிகள்

முழுமையாக தடுப்பது சாத்தியமில்லை. ஆனால் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்:வழக்கமான சுகாதார பரிசோதனைகள் – காலவரிசையாக அல்ட்ராசவுண்ட், ஸ்கேன் மூலம் ஆரம்ப நிலையில் கண்டறிதல், புற்றுநோயை கட்டுப்படுத்த முக்கியமானது.சிகரெட் புகைபிடிப்பு சிறுநீரகப் புற்றுநோய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்று. இதை நிறுத்துவதன் மூலம் அபாயம் குறையலாம்.நல்ல உணவுப் பழக்கம், சரியான உடற்பயிற்சி மற்றும் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது போன்றவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தற்போதைய மருத்துவ மேம்பாடுகள் மற்றும் உயர் தர சிகிச்சை முறைகள் மூலம், பல நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப முடியும். உங்கள் உடலில் எந்தவொரு மாற்றங்களும் தெரிந்தால், உடனே ஒரு சிறுநீரக நிபுணருடன் (Uro-Oncologist) கலந்தாலோசிக்கவும். வழக்கமான பரிசோதனைகள் மூலம் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தடுப்பது நல்லது!

The post சிறுநீரகப் புற்றுநோய் முக்கிய தகவல்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article