சிறுகதை-ஹரிணியின் காதல்!

1 month ago 10

நன்றி குங்குமம் தோழி

சர்வரிடம் ஹரிணி சொன்னாள், “அவ்வளவுதான் பில் கொண்டாங்க”…
“இல்ல மேடம்… உங்களுக்கு ரைட் சைடுல சாப்பிட்டுகிட்டு இருந்த ப்ளூசர்ட் போட்டவரு
உங்களுக்கும் சேர்த்து பணத்தை கொடுத்திட்டு போய்ட்டாரு!”
ஹரிணிக்கு கொஞ்சமாக கோபம்
வந்தது. “என்ன மேன் சொல்ற…

யாராவது எனக்காக பணம் கொடுத்தா வாங்கறது நியாயமா?”

சர்வர் விழித்தான். அம்பது ரூபா டிப்ஸ் ஞாபகம் வந்தது. “வந்து… உங்களுக்கு தெரிஞ்சவர்னு சொன்னாரு! நீங்களும் ஹலோ…ன்னு ஸ்மைல் பண்ணத பாத்தேன் மேடம்… சாரி மேடம்..!”
சர்வரின் சமாதானத்தை அலட்சியப்படுத்தி அந்த ஹோட்டல விட்டு வெளியே வந்தாள் ஹரிணி.தன் ஸ்கூட்டியிடம் வந்து, செல்லை எடுத்தாள். சரத் நம்பரை தேடினாள்… தொடர்பு கொண்டாள். எதிர் முனையில் ஆர்வம்… பதட்டம்…“சொல்லுங்க ஹரிணி…”“என்ன சரத்… நீங்க ஒரு ரெப்.. நான் அந்த பார்மசூட்டிகல் கம்பெனில ஒரு ஸ்டாஃப். ரெண்டு மாசமா சாதாரணமா பழக்கம். அத வெச்சு ஏன் என் பில்ல பே பண்ணிங்க!” கேட்டாள் ஹரிணி…நல்ல வேளை… ஹரிணி ரொம்ப கோபப்படவில்லை. “என்னங்க ஹரிணி… ஃப்ரெண்டுக்காக கொடுத்தது தப்பா… பிடிக்கலேன்னா ரொம்ப சாரி…”சரத் பொய்யாக பேசினான்.

“இல்ல சரத்… ஃபிரெண்டுன்னா ஒண்ணாவா ஹோட்டலுக்கு போனோம்? ஒண்ணாவா சாப்ட்டோம்… இது சரியில்ல சரத்!”சரத்திடமிருந்து எந்த பதிலுமில்ல.“ப்ளீஸ்… இனிமே இது மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க!”லைனை கட் செய்தாள் ஹரிணி.அடுத்த சில நாட்களுக்கு கம்பெனி பக்கம் சரத் வரவில்லை… அது ஹரிணியின் கவனத்தை ஈர்த்தது. யாரிடம் கேட்பது? தவறாகிவிடுமோ? அது சரி… ஏன் சரத் பற்றி அறிய மனது ஆர்வம் கொள்கிறது… ஹரிணி தன்னையே கேட்டுக் கொண்டாள்.

பதில் இல்லை.அந்த வாரம்தான் பிப்ரவரி பதினான்காம் தேதி வந்தது. இரவு பன்னிரண்டு மணிக்கு அவளது செல்லில் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் விழுந்தது. ஒரே ஒரு பெயர் மட்டும்…. அது சரத்!ஹரிணிக்கு புரிந்துவிட்டது. ஆனாலும் அவள் உள் மனது கேட்டது. இது தேவையா? இது ஏன் உன்னை கோபப்
படுத்தவில்லை? அப்படி என்றால் உனக்கும்…?ஹரிணி அன்று அலுவலகத்தில் சரியாகவே இல்லை.

மனம் சரத் பற்றியே நினைத்தது! எத்தனையோ பேரிடம் பழகுகிறாய். ஆனால் சரத் பற்றி நினைக்கும் போது மட்டும் மனது தடுமாறுகிறது. சந்தோஷம் வருகிறது. அவன் உருவம் எதிரில் வந்து போகிறது. இது எதில் போய் முடியும்? அந்த முடிவு வாழ்க்கைக்கு மகிழ்ச்சி தருமா? இதற்கு முடிவு கட்ட வேண்டும்.. நல்லதோ கெட்டதோ சரத்திடம் பேச வேண்டும்.
அன்று மாலை அவளே சரத்தை அழைத்தாள்.

“சொல்லுங்க ஹரிணி!”
“என்ன மெேசஜ்..? இன்னிக்கு
பாத்து?”
சரத் சிரிப்பது மட்டும் கேட்டது?
“சொல்லுங்க…”
“பதில் இல்லை”
“சரி… இன்னிக்கு ஈவ்னிங் அந்த ஹோட்டலுக்கு வாங்க..”
“சரிங்க…” துள்ளிக் குதித்தான் சரத்.
அன்று மாலை… ஹரிணி அலுவலகம் முடித்து, அந்த பழக்கமான
ஹோட்டலுக்கு சென்றாள்.
வாசலில் சரத் நின்றிருந்தான். முகத்தில் ஒரு அப்பாவி தோற்றம். அது நடிப்பு என்று ஹரிணிக்கு தெரியும்.

இருவரும் ஃபேமிலி ரூமுக்குள் சென்றனர்.“என்ன சாப்பிடறீங்க?” சரத் கேட்டான்.“ஏதாவது சொல்லுங்க…”
சர்வரிடம் சரத் ரெண்டு ஃபலுடா! சொன்னான்.
பயல் உச்சகட்ட குஷியில் இருப்பது புரிந்தது.
“இது சரிப்பட்டு வருமா?” ஹரிணி கேட்டாள்.

“எதுங்க?”
“போதும் நடிக்காதீங்க.. நம்ம பழக்கம்…”
“ஏங்க தெளிவா சொல்லுங்க… பழக்கம்னா?”
“கடவுளே… இந்தக் காதல பத்திதான் கேக்கறேன்…”
சரத் தலை குனிந்தான்.

வெட்கத்தில்…!
ஹரிணியே தொடர்ந்து பேசினாள்.
“ம்… சொல்லுங்க… முழுசும்
நனைஞ்சாச்சு… முக்காடு எதுக்கு?”
சரத் இப்போது காதலுடன் அவளை நேருக்கு நேர் பார்த்தான். பிறகு கண் மூடினான். எப்படி ஆரம்பிப்பது என்று ஒத்திகை பார்த்தான். பிறகு பேச
ஆரம்பித்தான்.

“எஸ் ஹரிணி… உங்கள முதல் தடவ பார்த்ததும் எனக்கு ஒரு சந்தோஷம் வந்தது. திரும்ப திரும்ப பாக்கணும்னு தோணிச்சு… அது காதல்னு புரிஞ்சுது… ஆனா, உங்க சம்மதம்தான் அதோட வெற்றிக்கு முக்கியம்… அதான்… சில செயல்கள்… உங்க மனசுல என்ன தோணுது? என்னை பிடிச்சிருக்கா?”
பிசிறின்றி கேட்டான் சரத்.

ஹரிணி இப்போது கண் மூடினாள்… ஒத்திகை பார்த்தாள்.. பிறகு கேட்டாள் “காதல்னா என்ன சரத்?”
“ம்… பருவ வயசுல ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு
வர்ற ஆசை… காலம் பூரா ஒண்ணா வாழலாம்னு தோணும்..”சிரித்தாள் ஹரிணி.

“சாதாரணமா சொல்லிட்டீங்க…? அதெப்படி டக்குன்னு வரும்?”
“அட… அதுதாங்க காதல். பார்த்ததும் பக்குன்னு பத்திக்கும்!”
சரத் சொல்ல, ஹரிணி உடனே கேட்டாள்..

“அது பொய்ங்க!”
சரத் கொஞ்சம் அதிர்ந்தான்… கடவுளே… ஏதாவது அறிவுரை சொல்லி கட் பண்ணிட்டு போய்டுவாளா?“பார்த்ததும் எப்படி வரும்? ஒரு காரணம் இருக்கும். யோசிச்சு சொல்லுங்க. என்ன கேக்கறேன்னு புரியலியா?” ஹரிணி கேட்டாள்.“வந்து… காரணம்… அது.. மனசுல தோணும்.. அவ்வளவுதாங்க..” சரத் ஏதோ சொன்னான்.“நீங்க சொல்ற எல்லாமே யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராதுங்க. கேக்கலாம்… பாக்கலாம்! அவ்வளவுதான்! எங்க ஆபீஸ்ல என் பக்கத்தல ஒருத்தி, ஒல்லியா, பல்லு கொஞ்சம் தூக்கலா.. இருப்பாளே… வித்யா.. அவள ஏன் யாரும் காதலிக்கல? ம்… சொல்லுங்க?”சரத்தும் அவளை பாத்திருந்தான். அவளின் உருவத்தை பார்த்து யாரும் தானாக போய் பேச மாட்டார்கள். உண்மைதான்.
“வந்து… காதலுக்கு அழகு முக்கியம்தாங்க…!” உண்மையை ஒத்துக் கொண்டான்.

“அந்த அழகு நிரந்தரமா? வயசானா குறைஞ்சுடுமே? அப்ப காதல் போய்டுமா?”“கரெக்ட்தான்..” தெரிந்தும் என்ன பேசுவது என புரியாமல் விழித்தான் சரத்.
“நல்லா கேட்டுக்குங்க.. காதல், பசி, தூக்கம் மாதிரி ஒரு உணர்வு… அந்த உணர்வு உள்ளத்தில் அதுவும் கொஞ்ச காலத்துக்குதான். பழகப் பழக பாலும் புளிக்கும். இந்த கொஞ்ச காலத்துக்கு அடிமையாகி… நாம நம்ம மொத்த வாழ்க்கையையும் வாழணும்னா… ரொம்ப யோசிக்கணும்… நெறைய பேசணும்.. எல்லாம் ஒத்து வரணும்!”

சரத் ஆச்சரியப்பட்டான்.. ஹரிணி சொல்வது உண்மைதான். தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த காதல் தம்பதிகள் நிறைய பேர் டைவர்சும் வாங்கியிருந்தது… பிறகு வேறொருவரை மணப்பது ஞாபகம் வந்தது. அப்படியென்றால் காதலை மீறி புரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளதோ?ஹரிணி தொடர்ந்து பேசினாள்.

“நம்ப அழகு… நாகரீகமா பேசற தன்மை.. இதுல விழுந்துதான் இப்ப தனியா பேசிகிட்டிருக்கோம். அதே நேரம் இந்த காதல் ஒரு புரிதலோட தொடரணும்னா… எல்லாத்தையும் பேசணும்.. நம்ப ஜாதிய நம்ப குடும்பம் ஏத்துக்கணும். நம்ப குடும்பத்துக்கான நம்ப கடமைய செய்யணும்.. நம்ப வருமானம் பத்தி முடிவுக்கு வரணும்.. நம்ப எதிர்கால ஆசைகளை பேசி, அனுசரிச்சு ஒத்துக்கணும். வெறும் காதலிச்சிட்டு போகலாம்னா அழகு மட்டும் போதும்.. தொடர்ந்து வாழ்க்கையில் சேரணும்னா நாலும் யோசிக்கணும். நிறை குறைகளை அலசணும்.. போங்க… நல்லா யோசிங்க.. குடும்பத்துல கலந்து முடிவெடுங்க.. நானும் அப்படியே செய்யறேன்… என்ன புரியுதா?”

சரத் விழித்தான். ஹரிணி சொல்வது உண்மைதான் என்றாலும், அவள் இதை அரேஞ்சுடு மேரேஜ் லெவலுக்கு கொண்டு போறாளோ! அதையே கேட்டான்.“இல்ல சரத்… ரெண்டுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு. லவ் மேரேஜ்ல மொதல்ல நம்ப சம்மதம்.. அப்பறம் குடும்பத்த கன்வீன்ஸ் பண்ணணும். அரேஞ்சுடு மேரேஜ்ல குடும்பங்கள் சம்மதிச்சு கடைசில நம்பள கேட்பாங்க..! புரிஞ்சுக்குங்க!”முத்தாய்ப்பாக சொன்னாள் ஹரிணி.

“இது ஒத்து வருமாங்க?”
“கண்டிப்பா வரும் சரத்… நம்ப காதல், அழகு தாண்டி… ஒரு உண்மையான அன்போடு இருக்கும்வரை இது வெற்றியாகும்!”உறுதியாக சொன்னாள் ஹரிணி…சரத்தும் தெளிவடைந்தான். நல்ல காதல் ஒன்றும் கண்மூடித்தனமா வருவதில்லையே..? அழகு பார்க்கிறதே! திருமணம் ஆனவர்கள் மீது வருவதில்லையே.. தங்கை உறவு முறை கொண்டவர்களிடம் வருவதில்லையே? அழகிருந்தாலும், பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களிடம் வருவதில்லை! இப்படி உள்ளன்போடு தம் குடும்ப சம்மதத்தையும் எதிர்பார்ப்பதில் தவறில்லையே? சரத் தெளிவுற்றான். இருவரும் நம்பிக்கையுடன் ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர்.

தொகுப்பு: கீதா சீனிவாசன்

The post சிறுகதை-ஹரிணியின் காதல்! appeared first on Dinakaran.

Read Entire Article