சென்னை: சிறந்த நூல் ஆசிரியர்களை கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். எழுத்து அறக்கட்டளை மற்றும் கவிதா பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் ஆசு எழுதிய பஞ்சவர்ணம் நூலின் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர் சேது. சொக்கலிங்கம் வரவேற்புரை வழங்கினார். முன்னாள் மத்திய அமைச்சரும், எழுத்து அறக்கட்டளை தலைவருமான ப.சிதம்பரம் விழாவுக்கு தலைமை வகித்தார்.
விழாவில் எழுத்தாளர் ஆசு எழுதிய பஞ்சவர்ணம் நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட முதல் பிரதியை ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆசுவுக்கு 2023-க்கான எழுத்தாளர் சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு மற்றும் ரூ.2 லட்சத்துக்கான காசோலைவழங்கப்பட்டது. பின்னர் நூல் அறிமுக உரையைத் எழுத்தாளர் அகரமுதல்வனும், மதிப்புரையை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனும் வழங்கினர்.