சிறந்த இளம் வடிவமைப்பாளராக கல்லூரி மாணவி தேர்வு

3 months ago 23

கரூர், அக். 1: சிறந்த இளம் வடிவமைப்பாளர் 2023-24ம் ஆண்டிற்கான போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் தர்ஷனாவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு வழங்கியதையடுத்து, கலெக்டர் மீ.தங்கவேல் கவுரவித்தார். கருர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமையன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து, கலெக்டரிடம் மனு அளித்து, கோரிக்கைகளுக்கு நிவாரணம் பெறுகின்றனர்.

இதில், மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை மனுக்களும், கனிவுடன் பெறப்பட்டு, துறை அதிகாரிகளிடம் வழங்கி, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவுகளை வழங்கி வருகிறார். அதேபோல், நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 504 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்டவை 59 மனுக்கள் ஆகும். மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிறமனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் 2022-23ம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தில் கைத்தறித்துறை சார்பாக இளம் வடிவமைப்பாளர்களை உருவாக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த இளம் வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி மாணவி தர்ஷனா மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை செப்டம்பர் 25ம் தேதி முதலமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், தர்ஷனாவுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மேலும், அரவக்குறிச்சி வட்டத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சார்பாக இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர் லேகா தமிழ்ச்செல்வன், தனித்துணை ஆட்சியர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கோட்டாட்சியர்கள் முகமது பைசல், கருணாகரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த இளம் வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி மாணவி தர்ஷனா மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை செப்டம்பர் 25ம் தேதி முதலமைச்சர் வழங்கினார்.

The post சிறந்த இளம் வடிவமைப்பாளராக கல்லூரி மாணவி தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article