சிராஜிடம் நன்றாக பந்துவீசியதாக கூறினேன் ஆனால்.. - டிராவிஸ் ஹெட் பேட்டி

1 month ago 5

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் பண்ட் 28 ரன்னுடனும், நிதிஷ்குமார் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி இன்னும் 29 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர் டிராவிஸ் ஹெட் அளித்த பேட்டியில் கூறியதாவது, கொஞ்சம் ரன்கள் குவித்தது நன்றாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இப்படி ரன்கள் குவிப்பது நல்லது. இந்த கடினமான பிட்ச்சில் இந்தியா நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் நான் என்னுடைய வாய்ப்புகளை எடுத்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளேன்.

நாங்கள் டாமினேட் செய்யும் நிலையில் இல்லை என்றாலும் சிறந்த நிலையில் இருக்கிறோம். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் தரம் இருக்கிறது. எனவே அவர்களுடைய ஃபீல்டிங் மேலே இருந்ததால் நான் என்னுடைய ரிஸ்க் எடுத்து விளையாடினேன். சதத்தை அடித்த போது புதிதாக சில வாரங்களுக்கு முன் பிறந்த என்னுடைய மகனுக்காக அப்படி கொண்டாடினேன்.

சிராஜிடம் அவுட்டான பந்தை நீங்கள் நன்றாக வீசியதாக சொன்னேன். ஆனால் அதை அவர் வேறு விதமாக புரிந்து கொண்டு என்னிடம் வந்து வெளியேறுங்கள் என்ற வகையில் சொன்னார். அப்படி நடந்ததை பார்த்து கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன். ஆனால் அவர்கள் அப்படித் தான் தங்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்றால் அது அப்படியே இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article