சிபிஎஸ்இ பள்ளி தொடங்கும் விதிகளில் மாற்றம் செய்தது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும்: கல்வியாளர்கள் கண்டனம்

7 hours ago 2

சென்னை: சிபிஎஸ்இ பள்ளி தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லை என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் செயல் என கல்வியாளர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது: பொதுவாக எந்த பள்ளிகளை தொடங்க வேண்டும் என்றாலும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்றாக வேண்டும். மாநில அரசு அந்த இடத்தில் ஏற்கெனவே பள்ளிகள் உள்ளதா, அதில் கற்பிக்கப்படும் பாடத்திட்டம், பள்ளி கட்டிடத்திற்கான தரநிலை ஆகியவை முழுவதும் உள்ளதா என்பதை ஆய்வு செய்து தடையில்லா சான்றிதழ் வழங்கும்.

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். அப்போது தான் சிபிஎஸ்இக்கு விண்ணப்பிக்க முடியும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை வகுத்து, தேர்வுகளை நடத்தி, மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. இதைமட்டுமே சிபிஎஸ்இ செய்கிறது, அதனால் பள்ளி நிர்வாகம் சரியாக செயல்படுகிறதா, மாணவர்களுக்கான வசதிகள் இருக்கிறதா ஆகியவற்றை கண்காணிக்க முடியாது. அதனை உள்ளாட்சி அமைப்புகள் தான் செய்ய முடியும்.

அதனால் மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் தேவை. இதனால் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் தேவையில்லை என்றால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலை இருக்கும் போதே சிபிஎஸ்இ மாநில நிர்வாகங்களை மதிப்பதில்லை, இப்போது அதுவும் இல்லை என்றால் மாநில அரசின் எந்த கட்டுப்பாட்டிற்கும் கீழ் வராது. இந்த நடைமுறை என்பது கல்வியை முழுமையாக வணிகமயமாக்கவே உதவும்.

மேலும் ஒன்றிய அரசு, மாநில அரசுகளை கவனத்திற்கு எடுத்து கொள்ளாமல் தனிச்சையாக முடிவெடுக்கவும், மாநில அரசுகளே இல்லை என்ற எண்ணத்திலும் செயல்படுகின்றனர். இந்த நடைமுறை என்பது கூட்டாட்சி தத்துவத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் சீர்குலைக்கும் விதமாகவே உள்ளது. கல்வியாளர் நெடுஞ்செழியன்: சிபிஎஸ்இ பள்ளி தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லை என்பது மிகவும் தவறான ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காவல் நிலையங்களை மூடிவிட்டு டெல்லியில் மட்டுமே காவல்துறை செயல்படும் என்றால் எப்படியோ அது போல தான் இந்த பரிந்துரையும்.

மாநில அரசுகளுக்கு தான் அந்தந்த மாநிலங்களின் உரிமை. எந்த பகுதிகளில் என்ன செய்ய முடியும், பள்ளிகள் கட்ட அனுமதி உண்டா, அதற்கான சூழல் உள்ளதா என்பது மாநில அரசுகளுக்க் தான் தெரியும். மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசே அனுமதி வழங்கினால் குழப்பம் தான் ஏற்படும், இதனால் மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்படும். ஏற்கெனவே கல்வித்துறையில் அதிகப்படியான பிரச்சனைகள் உள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ எந்த பள்ளிகளுக்கு ஒப்புதல் உள்ளது என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் எதுவும் நடத்துவது இல்லை. இதனால் பெற்றோர் தான் தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக அதிக கட்டணம் செலுத்தி பின்னர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை என தெரியவ்ந்து ஏமாற்றம் அடைகின்றனர். இதுபோன்ற எண்ணற்ற பிரச்சனைகளை சிபிஎஸ்இ கொண்டுள்ள நிலையில், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது மிகவும் தவறான ஒன்று.

The post சிபிஎஸ்இ பள்ளி தொடங்கும் விதிகளில் மாற்றம் செய்தது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும்: கல்வியாளர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article