சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டம்

2 weeks ago 4

ஈரோடு, ஏப். 3: ஈரோடு சின்னமாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர். ஈரோட்டில் மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் குண்டம், தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அதன்படி, நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 18ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த மாதம் 22ம் தேதி இரவு 3 கோயில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து தினந்தோறும் பெண்கள் கம்பங்களுக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

மேலும், மாநகரின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிறிய மாரியம்மன் கோயில்களிலும் விழா நடத்தப்பட்டு, அந்த கோயில்களின் சார்பாக பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோயில்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து, அன்றைய தினம் இரவு மாவிளக்கு மற்றும் கரகம் ஊர்வலம் நடந்தது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை நடந்தது. இதில், பக்தர்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து, அதனை அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து, சின்ன மாரியம்மன் கோயிலில் நேற்று காலை 9.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோயிலுக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜை, திருஷ்டி பூஜை முடிந்த பின்பு, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரோட்டத்தின்போது இருபுறம் சுற்றி நின்றிருந்த பக்தர்கள் பரவச கோஷமிட்டு தேரில் வந்த அம்மனை வழிபட்டனர்.

தேரானது பெரியார் வீதி வழியாக சென்று அக்ரஹாரம் வீதி உட்பட பல்வேறு வீதிகளில் பக்தர்களின் வழிபாட்டிற்காக நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, நாளை (4ம் தேதி) மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி சின்ன மாரியம்மன் கோயிலில் நிலை வந்தடைகிறது. இரவு சின்ன மாரியம்மனின் திருவீதி உலாவும், காரை வாய்க்கால் மாரியம்மனின் திருவீதி உலாவும் நடக்கிறது.

The post சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article