
மும்பை,
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும், 'அனிமல்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமான இவர், தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். ரசிகர்கள் இவரை நேஷனல் கிரஸ் என்று அழைக்கின்றனர்.
இந்நிலையில், சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று ராஷ்மிகா மந்தனா கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கையில் உதவுவதில்லை. அது ரசிகர்களின் அன்பினால் கிடைப்பது, அது வெறும் பெயர்கள் மட்டுமே. ரசிகர்களின் அன்பை எப்போதும் முதன்மையானதாக கருதுகிறேன். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன். அவர்களின் அன்புக்காக நான் எனது தூக்கத்திற்கு பாய் சொல்கிறேன்'' என்றார்.
சமீபத்தில் இவர் நடித்த சாவா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் நடிப்பில் குபேரா, சிக்கந்தர் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.