சினிமா தொழில்நுட்பம்… பெண்களுக்கான வாய்ப்புகளும் வழிகளும்!

6 months ago 18

‘இன்று பெண்கள் பல துறைகளில் படித்து முன்னேறி நினைத்துப்பார்க்க முடியாத வேலைகளில் கூட அமர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் இன்னமும் பெண்கள் அதிகம் நுழையாத துறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிக முக்கியத்துறை சினிமா தொழில்நுட்பம். அதாவது இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், இப்படியான தொழில்நுட்பத் துறையில் பெண் தொழிலாளர்கள் சற்று குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் முன்பை விட இப்போது அதிகம் பெண் பணியாளர்களை சினிமா துறையில் பார்க்க முடிந்தாலும் இது போதாது. சினிமா துறையில் பெண்கள் இன்னும் சாதிக்க என்னென்ன வழிகள் உள்ளன விளக்குகிறார் பேராசிரியர் டாக்டர் B. பாரதி (ஒருங்கிணைப்பாளர், விஷுவல் கம்யூனிகேஷன், லயோலா கல்லூரி) ‘சினிமா டெக்னாலஜி பொருத்தவரையில் முன்பை விட இப்போது பெண்களின் வரவு அதிகமாகதான் இருக்கு. ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டது போல் மற்ற துறைகள் அளவிற்கு அதிகமான பெண்களின் பங்கு சினிமா தொழில்நுட்பத் துறையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு பின்னணியில் பல காரணங்களும் இருக்கின்றன. பொதுவாகவே சினிமா துறையைச்சேர்ந்த ஆண் என்றாலே பெண் கிடைப்பது அரிது என் கையில் ஒரு பெண் சினிமா துறையில் இருக்கிறார் எனில் வரன் கிடைப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. நானும் இந்த சவாலை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மேலும் சினிமாத்துறை என்றாலே வீடு கொடுப்பதில் துவங்கி, கேரக்டர் பிரச்சனை உட்பட அத்தனையிலும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். இதைவிட சினிமா என்றாலே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே இடம் சென்னைதான் என்கையில் தமிழ்நாட்டின் கடைக்கோடி சினிமா ஆர்வலரானாலும் சென்னைக்கு வந்து இங்கே தங்கி இருந்து வாய்ப்புகளுக்காக அலைந்துதான் ஆக வேண்டும். இதையெல்லாம் யோசித்துதான் நிறைய பெண்கள் சினிமா தொழில்நுட்பத் துறைக்கு வருவதில்லை. இதில் மிகச் சுலபமாக சினிமாவில் இருக்கும் பெண் என்றாலே அவர்களின் குணமும் சோதனைக்குள்ளாகும். மேலும் சினிமாவில் கால நேரம் கிடையாது, வேலைகள் இருந்தால் இரவானாலும் வேலை செய்தாக வேண்டும். அதேபோல் நடிகர், நடிகைகளுக்கு மட்டும் தான் இப்போது வரைகேரவன்கள் கொடுக்கப்படுகின்றன. கழிப்பறை வசதிகள் எல்லா தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் அமைவதில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். இப்படியான சில காரணங்களால் தான் பெண்கள் வருவது குறைவாக இருக்கிறது. ஆனால் இப்போது நிறைய மாற்றங்கள் நிகழத் துவங்கி இருக்கு. நிறைய பெண்களை சினிமா துறையில் பார்க்கிறேன்’ சினிமாவை பொருத்தவரை இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் தாண்டி தொழில்நுட்ப ரீதியாக இன்னும் என்னென்ன பணிகள் இருக்கின்றன தொடர்ந்தார் பேராசிரியர் பாரதி.

‘ கதை ஆசிரியர்கள் பஞ்சம் இப்போது அதிகமாகவே இருக்கிறது. எழுத்துத் துறையில் ஆர்வம் இருக்கும் யாரும் கதையாசிரியராக சினிமாவிற்குள் வரலாம். ஏனெனில் இன்று விசுவலாக வரும் ஒரு நிமிட வீடியோவாக இருந்தாலும் அதற்கு தகுந்த கதை ஒன்று எழுத திறமைசாலி தேவை. டிவி விளம்பரங்கள் துவங்கி சினிமா திரைப்படங்கள் வரை எழுத்துதான் ஆணிவேர். எழுத்தில் பெண்கள் தங்களை பலப்படுத்தினால் விஷுவல் துறையில் மிகப்பெரிய அங்கீகாரம் பெறலாம். தவிர மேக்கப் ஆர்டிஸ்ட், கோரியோகிராபர், புரோடக்‌சன் மேனேஜர், பிஆர்ஓ எனப்படும் விளம்பர செய்தி தொடர்பாளர்கள் , டிஜிட்டல் விளம்பர இயக்குனர்கள் , டிவி சேனல் புரோக்ராம் புரொடியூசர், இப்படி நிறைய பணிகள் காத்துக் கிடக்கின்றன’ AI தொழில்நுட்பம் தற்போது சினிமா துறையில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. அதில் திறன் பெற என்னென்ன வழிகள் மற்றும் படிப்புகள் உள்ளன.

‘தற்போது AI அடிப்படையிலானடிப்ளமோ கோர்ஸ் எங்கள் கல்லூரியிலேயே அறிமுகம் செய்திருக்கிறோம். இதற்கான அறிமுக விழா கூட சமீபத்தில் நடிகர் நாசர் சார் பிசி ராம் சார், ஜான் விஜய் சார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள நடந்தது. AI அடிப்படையிலான தொழில்நுட்பத் திறன் பெறும் பொழுது தனக்கென ஒரு ஸ்டுடியோ அமைத்து இருக்கும் இடத்திலேயே வேலை செய்யவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதேபோல்தான் கிராபிக்ஸ், அனிமேட்டர், வி எப் எக்ஸ், சவுண்ட் மிக்சிங் இப்படி சினிமாவிலேயே ஏராளமான பிரிவுகள் இருக்கும் பட்சத்தில் களத்தில் இறங்கி வேலை செய்வது கடினமாக தெரிந்தால் இருக்கும் இடத்திலேயே ஸ்டுடியோ அமைத்து வேலை பார்த்துக் கொடுக்கும் வசதியையும் உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் திருமணம், குடும்பம், குழந்தை என ஆனால் கூட நம் பணிகளில் தடை ஏற்படாது. இதில் Phd முடித்து பேராசிரியர் பணியில் இணைந்தால் இன்று பல கல்லூரிகளிலும் விசுவல் கம்யூனிகேஷன் , சினிமா சார்ந்த படிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. சினிமா தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு சார்ந்த பேராசிரியராகவும் பணியாற்றலாம். எந்த வேலையும் நல்ல வேலை தான் அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் நம்வெற்றியும் தோல்வியும் அடங்கி இருக்கிறது. எதையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு அதில் பணியாற்ற நிச்சயம் அங்கீகாரமும், நல்ல வருமானமும் கிடைக்கும்’ தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் பேராசிரியர் பாரதி.
– ஷாலினி நியூட்டன்

The post சினிமா தொழில்நுட்பம்… பெண்களுக்கான வாய்ப்புகளும் வழிகளும்! appeared first on Dinakaran.

Read Entire Article