சிந்தாதேவி

3 months ago 18

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள். உரையாசிரியர்கள் இவளைக் கலைமகள், நாமகள், சரஸ்வதி என்று பலவாறு கூறுகின்றனர். இவளது ஆலயம் கலைநியமம் என்று அழைக்கப்படுகிறது. இவள் பௌத்த சமயத்தினர் போற்றும் கலைமகளாவாள். மதுரையில் இருந்த பௌத்த சமயம் மறைந்தாலும் சிந்தாதேவி வழிபாடு மதுரையைவிட்டு மறையவில்லை.

அது மதுரை மீனாட்சி கோயிலில் நிலைபெற்றுள்ளது மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் கலை நியமம் என்னும் சந்நதியையும் அதில் சிந்தாதேவியின் திருமேனியையும் காண்கிறோம். சிந்தாதேவியின் வடிவம் பற்றிய செய்திகள் விரிவாகக் கிடைக்கவில்லை. என்றாலும் இவள் நாற்கரங்களைக் கொண்டவள் என்றும், அவற்றில் அபயம், ஓலைச்சுவடி, அமுதசுரபி, ஜெபமாலை ஆகியவற்றை ஏந்தியவள் என்றும் சொல்கின்றனர்.

இவள், தனது ஆலயத்தில் பாடுகிடந்த ஆபுத்திரனுக்கு அட்சயபாத்திரத்தை வழங்கினாள் என்றும். அது பின்னாளில் மணிமேகலையின் கையை அடைந்து உலக உயிர்களுக்குப் பசிப் பிணியை
நீக்கியது என்று மணிமேகலைக்காப்பியம் கூறுகின்றது.இப்போது சிந்தாதேவி என்ற பெயரில் சரஸ்வதி வடிவமே வழிபடப்படுகிறது. சிந்தாதேவி என்பதற்கு சிந்தையில் அதாவது மனத்தில் உறையும் சக்தி என்று பொருள் கொள்கின்றனர். கல்வியின் தொடக்கத்தில் ஹரி நமோ சிந்தம் என்று சொல்வர் இதற்கு ஹரி என் சிந்தையில் உறைவதாக என்பது பொருளாகும். இங்கே சிந்தை என்பது மனத்தைக் குறிக்கிறது. மனத்தை செம்மைப்படுத்தி ஒருமுகப்படுத்திவைத்தால் சகல கலைகளும் தானே வந்து சேரும் என்பது ஆன்றோர்தம் அனுபவ மொழியாகும். இவ்வகையில் சிந்தையில் உறையும் செல்வியே சிந்தாதேவி எனப்பட்டாள் என்கின்றனர். இவளை ‘‘செழுங்கலைப் பாவை’’ என்கின்றனர்.

பௌத்தர்கள் தியானத்தின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்துவது மனத்தை ஆழ்நிலையில் வைத்தல், பசிதாகம் போன்றவற்றால் பாதிக்காது இருப்பது போன்றவற்றை செய்தனர். அதனால் மனத்தின் அடக்கும் வலிமையான சக்தியாக சிந்தாதேவியை வழிபட்டனர் என்கின்றனர். அவர்களுக்கு பிறகு சிந்தாதேவியைப் பற்றிய செய்திகளைக் காணமுடியவில்லை.

காஞ்சியிலும் சிந்தாதேவிக்கு ஆலயம் இருந்துள்ளது. வாலாஜாபாத்-காஞ்சிபுரம் சாலையில் தாங்கி என்னும் ஊருக்கு எல்லையில் பெரியகுளமும் அதன் கரையில் விநாயகருக்கும் சரஸ்வதிக்கு ஆலயங்கள் இருப்பதைக் காண்கிறோம். இங்கே விநாயகர் சிந்தாமணி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சரஸ்வதியின் பெயரும் சிந்தாதேவி என்று இருந்திருக்கவேண்டும் என்கின்றனர். சிந்தாதேவி விநாயகர் கோயில்கள் என்பதே மருவி இந்நாளில் சிந்தாமணி விநாயகர் கோயிலாகி உள்ளது என்கின்றனர். இங்கே கம்பருக்கும் நிகர்த்தவள்ளிக்கும் திருமேனிகள் உள்ளன.

ஜெயசெல்வி

The post சிந்தாதேவி appeared first on Dinakaran.

Read Entire Article