சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் திரளும் பக்தர்கள் கூட்டம்

18 hours ago 2

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழாவானது கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கோவிலில் இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி நாளை 12-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நேற்று முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் 15-க்கும் மேற்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்களும், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கார் பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சுமார் 4,533 சிறப்பு பேருந்துகள் 9,342 முறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக திருவண்ணாமலையில் 344 கண்காணிப்பு கேமராக்கள், 53 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 5,197 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கிரிவலப் பாதையில் 24 மணி நேரமும் இயங்கும் இலவச சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 56 இடங்களில் நிலையான மருத்துவ குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article