சித்தூர் மாவட்டத்தை முதன்மையாக மாற்ற பாடுபடுவேன்

1 hour ago 2

*புதிதாக பதவியேற்ற சூடா சேர்மேன் பேச்சு

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தை முதன்மையாக மாற்ற பாடுபடுவேன் என புதிதாக பதவியேற்ற சூடா சேர்மேன் பேசினார். ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளை மாநில அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறது.

அதேபோல் பல்வேறு சேர்மன் மற்றும் தலைவர் பதவிகளுக்காக ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை நியமனம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்ட சூடா சேர்மன் பதவிக்கு முன்னாள் சித்தூர் மாநகராட்சி மேயர் கட்டாரி ஹேமலதாவை பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்தா.

இந்நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, சித்தூர் சூடா சேர்மேனாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட இணை கலெக்டர் வித்யாதாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், சூடா சேர்மேன் கட்டாரி ஹேமலதா பேசியதாவது:

மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு என் மீது நம்பிக்கை வைத்து சித்தூர் மாவட்ட ஹர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (சூடா) சேர்மன் பதவி வழங்கினார். இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தூர் மாவட்டத்தில் மொத்தம் 36 மண்டலங்கள் உள்ளன. அதில் 26 மண்டலங்களுக்கு சித்தூர் மாவட்ட அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இணைப்பு உள்ளது. இந்த 26 மண்டலங்களில் மாநில அரசிடம் இருந்தும், மத்திய அரசிடம் இருந்தும், நிதி பெற்று பல்வேறு நல திட்ட பணிகளை செய்ய உள்ளேன். அதேபோல் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் சித்தூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றி அமைக்க பாடுபடுவேன். அதேபோல் பொதுமக்கள் தங்களின் குறைகளை தன்னிடம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.

நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். அதேபோல் அதிகாரிகளுடன் இணைந்து சித்தூர் அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் மூலம் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகளை உடனடியாக செய்ய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சித்தூர் மாவட்ட தெலுங்கு தேச கட்சி அலுவலகத்தில் இருந்து அக்கட்சியினர் பைக் பேரணி நடத்தினர். அப்போது, சித்தூர் மாநகரத்தில் முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக சென்று சித்தூர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சூடா அலுவலகத்திற்கு சென்றனர். இதில் சித்தூர் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன், முன்னாள் எம்எல்சி துரைபாபு, முன்னாள் எம்எல்ஏ மனோகர், காந்தி, மாநகராட்சி மேயர் அமுதா, துணை மேயர் சந்திரசேகர் ரெட்டி மற்றும் ஏராளமான தெலுங்கு தேச கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post சித்தூர் மாவட்டத்தை முதன்மையாக மாற்ற பாடுபடுவேன் appeared first on Dinakaran.

Read Entire Article