சித்தா, ஆயுர்வேதா உள்பட 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் 10 நாளில் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்

2 weeks ago 3

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கன்னியாகுமரி தளவாய் சுந்தரம் (அதிமுக) பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் ஒரே ஒரு ஆயுர்வேத அரசுக் கல்லூரி தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக ரீடர் போஸ்ட்டை இப்போது எடுத்துக்கொண்டால் 3 இடம் இருக்க வேண்டும். அதில் ஒன்றுதான் இருக்கிறது. விரிவுரையாளர்களை எடுத்துக்கொண்டால் 16 இருக்க வேண்டும். அதில் 9 தான் இருக்கிறது. ஆக மொத்தம் கூட்டிக் கழித்துப்பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு 16 இடங்கள் காலியாக இருக்கிறது. கடந்த மாதம் ஆயுத்வேதா கல்லூரிக்காக மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவிலிருந்து ஆயுர்வேத நிலையத்தை ஆய்வு செய்தார்கள். அவர்கள் ஆயுர்வேதா மெடிசினில் குறைபாடு இருக்கிறது. விரிவுரையாளர் பதவி காலியாக இருக்கிறது. எனவே, அமைச்சர் அங்கே இருக்கக்கூடிய விரிவுரையாளர்களுடைய பதவிகளை நிரப்பி இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கு உதவ வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “ இந்திய மருத்துவமான சித்தம், ஆயுர்வேதம், யோகா, யுனானி, ஓமியோபதி போன்ற 5 பிரிவுகளிலும் காலியாக இருக்கிற 121 இடங்களை நிரப்பும் பணி தற்போது முடிவுற்று சான்றிதழ் சரிபார்ப்பு, ரேங்கிங், கம்யூனல் ரோட்டேசன் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 10 நாளில் அந்த பணிகள் முடிவுற்றவுடன் முதல்வர் வாயிலாக அந்த 121 பணியிடங்களும் நிரப்பப்படும். உறுப்பினர் கோரியதைப்போல அவர் பகுதியிலிருக்கிற ஆயுர்வேத கல்லூரிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றார்.

The post சித்தா, ஆயுர்வேதா உள்பட 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் 10 நாளில் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article