சிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற தடை: சிதம்பரம் சார்பு நீதிமன்ற உத்தரவை மீறக்கூடாது.! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 hours ago 2

சென்னை: சிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, கோவில் கொடிமரம் தொடர்பாக சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஐகோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் பிரம்மோற்சவம் நடத்தப்படாது என்பதை மனுவாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரம்மோற்சவம் நடத்தப்படமாட்டாது என எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறக்கூடாது உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post சிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற தடை: சிதம்பரம் சார்பு நீதிமன்ற உத்தரவை மீறக்கூடாது.! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article