தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், புதிய தொழிற்பேட்டைகள், பொது வசதி மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிட்கோ மூலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் சேலம் அரியகவுண்டம்பட்டியில் 99,346 சதுரஅடி பரப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.25.34 கோடியில் 102 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். இதன்மூலம், 2000 பேர் நேரடியாகவும், 4,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.