
மும்பை,
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைதொடர்ந்து அந்தப்படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் சிங்கம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார். இதில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இதில் நடித்ததன் மூலம் இந்தி பார்வையாளர்களிடமிருந்து அதிக அன்பை பெற்றார் காஜல் அகர்வால். அதனைத்தொடர்ந்து, இரண்டாம் பாகமாக 'சிங்கம் ரிட்டன்ஸ்' என்கிற படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி, தற்போது 'சிங்கம் அகெய்ன்' என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்க கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதன் முதல் பாகத்தில் நடித்திருந்த காஜல் அகர்வால் இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அவர் நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், 'சிங்கம் அகெய்ன்' படத்தில் இடம் பெறாதது ஏன்? என்ற கேள்விக்கி காஜல் அகர்வால் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினம். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். நடிகையாக உள்ள அனைவரும் பேராசை கொண்டவர்கள். அதன்படி, உருவாகும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற பேராசை எங்கள் அனைவருக்கும் உண்டு' என்றார்.