மரக்காணம், அக். 29: மரக்காணம் அருகே சிக்கன் உள்ளிட்ட 3 கடைகளை உடைத்து பணம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் அதே பகுதியில் இசிஆர் சாலையோரம் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிக்கன் கறி விற்பனை அதிகமாக இருந்துள்ளது. இவரது கடையில் அன்று ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனையாகியுள்ளது. இந்த பணத்தை அவர் கடையிலேயே வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை வந்து பார்த்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் கடையில் உள்ளே சென்று பணம் வைத்திருந்த கல்லாவை பார்த்துள்ளார். அது உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோல் மரக்காணம் அடுத்த கூனிமேடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முகமது அலி, அசாருதீன் ஆகியோருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோர் மற்றும் செல்போன் சர்வீஸ் மையம் ஆகிய 2 கடைகளை மர்ம நபர்கள் உடைத்து கடையில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். கடைக்கு உள்ளே சென்று பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துள்ளார். மற்றொரு நபர் முகத்தை துணியால் மறைத்துள்ளார். இதனால் அவர்கள் யார் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 2 இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பலா? அல்லது தனித்தனி நபர்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன பணம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடை மற்றும் வீடுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
The post சிக்கன் கடை உள்ளிட்ட 3 கடைகளை உடைத்து பணம், லேப்டாப் கொள்ளை appeared first on Dinakaran.