
நெல்லை மாவட்டம் பணகுடியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் (வயது 48) டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் சுமார் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது, டாக்டர் பாலச்சந்தர் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலச்சந்தர், இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, டாக்டர் பாலச்சந்தரை கைது செய்தனர்.