கடலூர், ஜன. 30: கடலூர் அருகே நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் ஒன்றியம் வெள்ளக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம் கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் 19ம் தேதி அரசு இடத்தை கையகப்படுத்தியுள்ளதாகவும், 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இப்பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏற்கனவே மலையடிக்குப்பம் கிராமத்தில் சமையல் பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். பட்டா வழங்கக்கோரி அளித்த மனு பரிசீலனையில் உள்ளது. தற்போது, சுமார் 150 பேரின் வீடுகள் மற்றும் முந்திரி பயிர்கள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டோம். மக்கள் மீதான நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.
அனைவருக்கும் உரிய இலவச பட்டா வழங்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அப்போது அங்கு பாதுகாப்புக்கு பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அதிகாரிகள் பொக்லைன் மூலம் முந்திரி மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் அதனை தடுத்து நிறுத்தியதால் அவர்கள் 22 பேரை குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, பின்னர் விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post சாலைமறியல் போராட்டம் நடத்திய கிராம மக்கள் கைது appeared first on Dinakaran.